சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் கீழ் 3 பில்லியன் டொலர்களைப் பெறுவதற்கு இலங்கை தகுதி பெற்றுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்தார்.
CNBC ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலின் போது இதனைத் தெரிவித்துள்ளார். இந்த கடன் 3 வருட காலப்பகுதியில் தவணை முறையில் பெறப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் சுட்டியுள்ளார்.
சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு பணத்தை வழங்க ஆரம்பித்த பின்னர், ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் உலக வங்கி (சர்வதேச நாணய நிதியம் வழங்கும் தொகைக்கு மேலதிகமாக) மேலும் 4 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கவுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
விரிவாக்கப்பட்ட நிதி வசதி என்பது, கடுமையான பணப் பற்றாக்குறை உள்ள நாடுகளுக்கு உதவுவதற்காக சர்வதேச நாணய நிதியத்தால் உருவாக்கப்பட்ட ஒரு வசதி ஆகும்.
கடந்த காலங்களில் இலங்கை அதிகாரிகள் செய்த தவறுகளுக்கு பாடம் கற்பதற்கு தற்போதைய பொருளாதார நெருக்கடி ஒரு சந்தர்ப்பம் எனவும் சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டம் முடிவடைந்த பின்னர் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்களை மாற்றியமைக்கக் கூடாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதிகாரிகள் பாடம் கற்று, சரியான திசையில் செல்வதற்கும், சர்வதேச நாணய நிதிய திட்டத்திற்கு அப்பால் செல்வதற்கும் இதை ஒரு வாய்ப்பாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் மத்திய வங்கி ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு முக்கிய காரணம் பல தசாப்தங்களாக நடந்து வரும் நிதி முறைகேடுதான் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.