திருநாவுக்கரசு நாயனார் குருபூசை நிகழ்வும், பாரம்பரிய விளையாட்டு மற்றும் ஊஞ்சல் விழாவும்.
( சகா)
மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகமானது மகிழூர் பிரதேச சமூக அமைப்புக்கள் மற்றும் அறநெறிப்பாடசாலைகளுடன் இணைந்து நடாத்திய சமயகுரவர்களுள் தலையாயவரான திருநாவுக்கரசு நாயனார் குருபூசை நிகழ்வும் மற்றும் பாரம்பரிய விளையாட்டு, ஊஞ்சல் விழாவானது பிரதேச செயலாளர் உ உதயஸ்ரீதர் தலைமையில் நேற்று முன்தினம் (27.04.2025) மகிழூர்முனை ஸ்ரீ விஷ்ணு ஆலய முன்றலில் இடம்பெற்றது.
மகிழூர்முனை சக்தி வித்தியாலயத்திற்கு அருகாமையில் இருந்து ஆரம்பமான ஊர்வலத்தில் அறநெறிப்பாடசாலை மாணவர்கள் திருநாவுக்கரசு நாயனாரின் வேடம் தரித்து, நாயனாரின் திருவுருவப்படத்தினை ஏந்தியவாறு ஆலயமுன்றலை அடைந்ததுடன் பூசை வழிபாடுகளுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின.
திருநாவுக்கரசு நாயனாரின் வாழ்க்கை வரலாறு மற்றும் அற்புதங்கள் தொடர்பாக அறநெறிப்பாடசாலை மாணவர்கள் மற்றும் அதிதிகளினால் சொற்பொழிவுகள் இடம்பெற்றது.
அதனை தொடர்ந்து ஆலய முன்றலில் பாரம்பரிய விளையாட்டுகள் மற்றும் ஊஞ்சல் விழா என்பன மாணவர்களின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், மகிழூர் பிரதேச ஆலயங்கள் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், அறநெறி பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
இந்த நிகழ்வினை பிரதேச செயலக கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் இந்து கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோர் இணைந்து ஒருங்கிணைப்பு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.











