மனித இனத்தின் ஆண் வர்க்கம் அழிவின் விளிம்பில் உள்ளதா ?
-சஞ்சீவி சிவகுமார் -தென்கிழக்குப் பல்கலைக்கழகம்-
மனித இனத்தின் ஆண் வர்க்கத்தை நிருணயிக்கும் நிறமூர்த்தங்கள் அழியும் அபாயத்தை எதிர்கொண்டு வருவதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் நேஷனல் அகாடமி ஒவ் சயன்ஸ் ஆய்வு அறிக்கை ஒன்றை அடிப்படையாகக் கொண்டு இதனை உறுதிப்படுத்தியுள்ளது. சமூக வலைத்தளத் தகவல்களிலும் இந்த விடயம் பெரும் பேசுபொருளாகியுள்ளது.

மனிதர்களில் 22 சோடி தன் நிறமூர்த்தங்களும் ஒரு சோடி இலிங்க நிறமூர்த்தங்களும் காணப்படுகின்றன. இலிங்க நிறமூர்த்தங்களே அங்கிகளின் பால் நிர்ணயத்துக்கு காரணமாக அமைகின்றன. ஒரு அங்கி ஆணா ? பெண்ணா ? என்பதை தீர்மானிப்பது இவைதான். இந்த வகையில் ஆண்களில் ஒரு X நிறமூர்த்தம் மற்றும் ஒரு Y நிறமூர்த்தம் காணப்படுகின்றது. பெண்களுக்கு இரண்டு X நிறமூர்த்தங்கள் உள்ளன. அதாவது XX நிறமூர்த்தம் உள்ள அங்கி பெண், XY உள்ள அங்கி பெண். நிறமூர்த்தங்கள் XXY ஆகவோ XXX ஆகவோ அமையும் போது ஆண் – பெண்ணற்ற தன்மை தோன்றுவதாக அறிகிறோம். SRY என அழைக்கப்படும் Y நிறமூர்த்தத்திலுள்ள பால் நிருணய பகுதியே ஆண் அங்கியொன்றில் பால் உருவவியல் மற்றும் நடத்தை சார்ந்த செயற்பாடுகளான துணைப் பாலியல் விருத்திக்கு காரணமாக அமைக்கின்றன. ஆகவே Y நிறமூர்த்தம் இழக்கப்பட்டால் மனிதர்களின் ஆண் தன்மைக்கான நிர்ணயம் என்னவாகும் என்பதே இந்தப் பெருங் கேள்வி.

கடந்த இலட்சக்கணக்கான ஆண்டுகளில் இந்த நிறமூர்த்தங்களும் அவற்றில் வைக்கப்பட்டுள்ள மரபணுக்களும் பல மாற்றங்களுக்கு உள்ளாகிவந்துள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த 166 மில்லியன் ஆண்டுகளில் ஆண்களில் பால் நிருணயத்தில் கருதப்படும் Y நிறமூர்த்தம் அதன் பெரும்பாலான மரபணுக்களை இழந்துவிட்டதாக ஆராய்ச்சிகள் வெளிப்படுத்துகின்றன. ஆரம்பகாலங்களில் 900 மரபணுக்களைக் கொண்டிருந்த Y நிறமூர்த்தம் தற்கால மனிதரில் வெறும் 55 மரபணுக்களுடன் காணப்படுகின்றது. (Y நிறமூர்த்த மரபணுக்களின் எண்ணிக்கை குறித்தும் மாறுபட்ட தகவல்கள் உள்ளன).
இந்த மரபணு இழப்பு ஒரு மில்லியன் ஆண்டுகளுக்கு 10 மரபணுக்களின் இழப்பு எனும் விகிதத்தில் நடைபெறுவதாகவும் கூட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதன்படி, 4.5 மில்லியன் ஆண்டுகளுக்குள் மனித வர்க்கத்தில் Y நிறமூர்த்தம் முற்றிலும் மறைந்துவிடும் வாய்ப்பு இருப்பதாக சில விஞ்ஞானிகள் வலியுறுத்துகின்றனர். அதன் அடிப்படையில் Y நிறமூர்த்தம் தொலைந்தால், பிறப்பவர்கள் அனைவரும் பெண்களாகவே இருப்பார்கள் என்பதும் இதில் குறிப்பிடப்படுகின்றது. ஆயினும் வேறு சில ஆய்வுகள் இந்த மரபணு இழப்புவீதம் மிக மந்தமாகவே நடைபெறுவதாகவும் இவற்றில் பெரும்பாலான மரபணு இழப்புகள் முலையூட்டிகளின் கூர்ப்பு நிலை விருத்தியின் போதே இழக்கப்பட்டதாகவும் தெரிவிக்கின்றன. தற்போதைய மரபணு இழப்பு வீதத்தின் படி ஒரு மில்லியன் ஆண்டுக்கு சுமார் ஐந்து மரபணுக்களே இழக்கப்படுவதாவும் இதன்படி, மீதமுள்ள 55 மரபணுக்களும் இழப்பதாயின் அடுத்த 11 மில்லியன் ஆண்டுகளில் தான் நிகழும் எனவும் சில ஆய்வாளர்கள் ஆறுதல் வார்த்தை கூறியுள்ளார்கள்.
அப்படியாயின் பதினோரு மில்லியன் ஆண்டுகளின் பின்னர் ஆண்வர்க்க உருவாக்கம் இல்லாமல் போனால் ஒட்டுமொத்த மனித வர்க்கத்திற்கும் இனவிருத்தி இல்லாமல் அழிவு நிகழ்ந்துவிடுமா? என்ற கேள்வி அறிவியல் உலகில் புதிர்போட்டுக் கொண்டிருக்கின்றது.
இந்தநிலை வேறு விலங்குகளில் நிகழ்ந்துள்ளதா? அவ்வாறு நிகழ்ந்துள்ளதாயின் அவற்றின் நிலை என்ன? என்பது குறித்தும் ஆய்வுகள் காணப்படுகின்றன. முன்னரே கொறிப்பான் வகையைச் சேர்ந்த சில எலி இனங்களில் Y நிறமூர்த்தங்கள் இழந்து விட்டன. இருப்பினும் Y நிறமூர்த்தமின்றி அவை விசித்திரமாக, அங்கித் தொடர்ச்சிபெற்று உயிர் வாழ்கின்றன. அமானி முள்ளெலி , கிழக்கு ஐரோப்பாவில் உள்ள மொல் வோல்ஸ் மற்றும் ஜப்பானில் உள்ள கீறல் எலிகள் என்பன இத்தகைய Y நிறமூர்த்தமுடன் SRY மரபணு காணாமல் போன எலிகளின் எடுத்துக்காட்டுகள். அறிவியலால் முழுமையாக விளங்கப்படுத்த முடியாதபடி இவற்றில் கூர்ப்புப் படிமுறையினுடாக ஆண்வர்க்கத்தின் விருத்திக்கான மரபணு மற்றைய நிறமூர்த்தங்களில் உருவாக்கப்பட்டிருந்தமை யை விஞ்ஞானிகள் ஆய்வுகளில் கண்டறிந்துள்ளனர். அமானி முள்ளெலிகளில் X நிறமூர்த்தத்திலேயே விதைச் சுரப்பிகள் வளர்வதற்கான விசேட மரபணுக்கள் காணப்படுவதை விஞ்ஞானிகளால் அறியமுடிந்தது. கூர்ப்புச் செயன்முறை புதிய இருப்புகளுக்கான வசதிகளை அதிசயமாக உருவாக்கியே செல்லும்.

சுருக்கமாக, Y நிறமூர்த்தம் மெதுவாக சீர்குலைவது இனமொன்றின் உடனடி அழிவுக்கு வழிவகுக்காது. கூர்ப்புச் செயல்முறைகள் தொடரும்போது Y நிறமூர்த்தம் இல்லாமல் கூட ஆண் பாலினத்தை உறுதி செய்ய புதிய முறைமைகள் உருவாகலாம்.