தவிசாளர் தெரிவு கட்சியை பொறுத்தது; முதன்மை வேட்பாளர் என்று இத்தேர்தலில் இல்லை!

 தமிழரசு வாலிப முன்னணி செயலாளர் நிதான்சன் தெரிவிப்பு

( வி.ரி. சகாதேவராஜா)

இலங்கை தமிழரசு கட்சி அம்பாறை மாவட்டத்தில் ஆறு சபைகளிலே  போட்டியிடுகின்றது. இதில் தவிசாளர் தெரிவு என்பது முற்று முழுதாக கட்சியைப் பொறுத்தது.

இவ்வாறு இலங்கை தமிழரசுக் கட்சியின் வாலிப முன்னணியின் செயலாளரும் கல்முனை தொகுதி இணைப்பாளருமான அருள். நிதான்சன் தெரிவித்தார் .

சமகாலத்தில் முதன்மை வேட்பாளர் மற்றும் தவிசாளர் தெரிவு தொடர்பாக பல்வேறுபட்ட கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

 இது தொடர்பாக அவரிடம் கேட்ட பொழுது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது ..

உள்ளூராட்சி தேர்தலைப் பொறுத்தவரையில் முதன்மை வேட்பாளர் என்று ஒன்று இல்லை.

 வட்டாரத்தின் பிரதான வேட்பாளர்கள் மற்றும் மேலதிக வேட்பாளர்கள் என்று இரு அணியினர் இருக்கின்றார்கள் . அது

தவிர முதன்மை வேட்பாளர் என்ற  பதம் இங்கு பயன்படுத்தப்படுவதில்லை .

அடுத்தது,  தவிசாளர் தெரிவைப் பொறுத்தவரையிலே அது முழுக்க முழுக்க கட்சியைச் சார்ந்தது.

ஒரு வேட்பாளர் முன்னாள் தவிசாளராக இருக்கலாம்; முன்னாள் உறுப்பினராக இருக்கலாம்; ஏன் புதியவர்களாக கூட இருக்கலாம்.

யார் எப்படி இருந்தாலும் அது கட்சியினுடைய தீர்மானத்தை பொறுத்தே அமையும். 

இதனை தெளிவாக சகலருக்கும்  தெரியப்படுத்திக் கொள்கின்றேன். என்றார்.