கணக்காளர் றிஸ்வி யஹ்ஸர் இந்தியா பயணம்
(ஏ.எல்.எம்.ஷினாஸ்)
அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் கணக்காளராக கடமையாற்றும் மருதமுனையை சேர்ந்த கறுத்தீன் றிஸ்வி யஹ்ஸர் டிஜிட்டல் மயமாக்கல் தொடர்பான 14 நாட்கள் பயிற்சி நெறியில் கலந்து கொள்வதற்காக (19) சனிக்கிழமை இந்தியா பயணமாகவுள்ளார். தென்கிழக்கு பிராந்தியத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட ஒரே ஒரு முஸ்லிம் கணக்காளர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கறுத்தீன் றிஸ்வி யஹ்ஸர் 2000 ஆம் ஆண்டு கணக்காளர் சேவை நியமனத்தை பெற்று மகோயா வலயக் கல்வி அலுவலகத்தில் தனது கடமையினை ஆரம்பித்தார். பின்னர் 2010 ஆம் ஆண்டு அக்கரைப்பற்று வலயக்கல்வி அலுவலகத்திலும் பின்னர் 2016 ஆம் ஆண்டு தொடக்கம் கல்முனை வலயக் கல்வி அலுவலகத்திலும் கணக்காளராக கடமையாற்றிய நிலையில் 2021ஆம் ஆண்டு நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் கணக்காளராக தனது கடமையை பொறுப்பேற்றுக் கொண்டார். இதே நேரம் மகோயா பிரதேச செயலகம், பதியத்தலாவ பிரதேச செயலகம், அக்கரைப்பற்று மாநகர சபை போன்றவற்றில் பதில் கடமையையும் மேற்கொண்டுள்ளார். இவர் இலங்கை கணக்காளர் சேவை தரம் -I ஐ சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பட்டதாரியான இவர், இப்பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவ முதுமாணி பட்டத்தையும் பூர்த்தி செய்துள்ளார். பட்டய கணக்காளர், கணக்காளர்களுக்கான பொது நிதி, பட்டய பொது நிதி கணக்காளர்களுக்கான பட்டம் போன்ற பட்டங்களையும் பூர்த்தி செய்துள்ளார்.
மக்கீன் நஜிமுனிஸா – இஸ்மாலெப்பை கமறுத்தீன் ஆகியோருக்கு 1976 ஆம் ஆண்டு மருதமுனையில் பிறந்த றிஸ்வி யஹ்ஸர் அவர்கள் கணக்காளர் சேவை கடமைகளுக்கு அப்பால் சமூகம் சார்ந்த பல செயற்பாடுகளிலும் முன்நின்று செயல்பட்டு வரும் ஒருவராவார். மருதமுனை யுனிவர்ஸ் விளையாட்டு கழகத்தின் தலைவராகவும் செயற்படும் இவர், பிரதேசத்தின் விளையாட்டு, கல்வி, சமய, சமூக அபிவிருத்தி சார் செயற்பாடுகளில் முன்னின்று செயல்பட்டு வரும் ஒருவராவார். இவர் மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியின் பழைய மாணவரும் ஆவார்.
