( வி.ரி.சகாதேவராஜா)

அம்பாறை மாவட்ட தமிழர்கள் தமிழரசுக்கட்சிக்கும், தமிழ்தேசியக்கட்சிகளுக்குமே ஆணை வழங்கவேண்டும்.

 இலங்கை தமிழரசுக் கட்சி காரைதீவு பிரதேச சபையை  வழமைபோல் இம்முறையும் கைப்பற்றும்.

இவ்வாறு இலங்கை தமிழரசுக் கட்சியின் காரைதீவு கிளைத் தலைவரும் ,முன்னாள் தவிசாளரும், இந்நாள் வேட்பாளருமான கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் சூளுரைத்தார்.

நேற்று அவரது  வட்டாரத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் பேசியபோது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

  வேட்பாளர் கி.ஜெயசிறில் மேலும் தெரிவிக்கையில் 

தொடர்ச்சியாக இலங்கை தமிழரசுக் கட்சி காரைதீவு பிரதேச சபையை கைப்பற்றி வருகின்றது. இம்முறையும் இலங்கை தமிழரசுக் கட்சியே காரைதீவு பிரதேச சபையில் ஆட்சி அமைக்கும்.

 அதே போன்று அம்பாறை மாவட்டத்திலும் அதிகப்படியான உள்ளூராட்சி சபைகளை கைப்பற்றும்.

 ஏன் என்றால் இங்கு உண்மையான உணர்வுள்ள தமிழர்கள் இருக்கின்றார்கள்.

அவர்கள் இனம் சார்ந்த நிலம் சார்ந்து சிந்திக்கின்றார்கள். எமது மக்களை எமது மக்கள்தான் ஆள வேண்டும்.

உள்ளூராட்சி தேர்தலினை எம் மக்கள் வாக்குகளினை உறவினர், நண்பர்கள் தெரிந்தவர் வாறவர்கள் போறவர்கள் என இந்தத் தேர்தலில் சிதைத்துவிடக்கூடாது.

இந்த நாட்டில்  தமிழன் வாழ்கின்றான் என்பதனை இற்றைவரைக்கும் அடையாளப்படுத்துவது தமிழ்த்தேசியக்கட்சிகளில் நாங்கள் வென்றெடுக்கும் எமக்கான பிரதிநிதித்துவங்களே.

எம்மினைத்தினை அடக்கிஆளவேண்டுமாயின் எம்மிடத்தே வேறூன்றியிருக்கும் தமிழ்தேசிய அரசியலை மலினப்படுத்தி அழிக்கவேண்டும் இதற்காகவே காலாகாலம் பல்தரப்பட்ட முயற்சிகளினை பெரும்பான்மை அரசியல்வாதிகள் மேற்கொண்டுள்ளனர்..

இதற்காகப் பயன்படுத்தப்படும் ஏவல் பேய்களே இன்றைய பெரும்பான்மைக்கட்சி வேட்பாளர்களும் அவர்களது சுயேட்சை வேட்பாளர்களும் எம்மினத்தின் அடையாளம் எமக்கான இருப்பு தமிழ்தேசிய அரசியலே இதற்காகவே மக்கள் ஆணைவழங்கினார்கள் இனியும் வழங்குவார்கள்

இன்று எம்மக்களில் சிலர்மாற்றத்திற்காக வாக்களித்துப்பெற்ற பெரும்பான்மை கட்சிகளில் தமிழ் பிரதிநிதிகள் கண்ணிருந்தும் குருடர்களாகவும் வாய்பேசாப்பொம்மைகளாகவும் காணப்படுகின்றார்கள். இது எம்மக்களுக்கு பாரிய ஏமாற்றத்தினை தந்துள்ளது.

அன்று எம்மக்களினை திசைதிருப்பி அபிவிருத்தி அரசியல் எனும் மாயையினை காட்டி சில எலும்புத்துண்டுகளின் பின்னால் சென்ற அரசியல் மேதாவிகள் இன்று அரசியல் அனாதைகளாக்கப்பட்டுள்ளனர். இவர்கள் பின்னால் சென்ற  ஒருசில மக்களும்  இன்று தெளிவடைந்து தமிழ்தேசிய அரசியலை ஏற்று எமக்கான பாராளுமன்ற பிரதித்துவத்தினை அம்பாறையில் கௌரவமாக வென்றெடுத்துள்ளார்கள்.

இன்றைய அம்பாறை தமிழரது ஒற்றுமையினை சீர்குலைத்து இங்கு எமது அடையாளத்தை அழிக்க மாற்றினக்கட்சிகள் எமக்கெதிரான மிகவும் சூட்சுமமான வியூகங்களினை அமைக்கிறார்கள் இவர்களது நிகழ்ச்சிநிரலுக்காக  எம்மினத்தில் சில கைக்கூலிகள் இவர்களது முகவர்களாக செயல்படுகின்றார்கள்.

அம்பாறையில் எமது அடையாளத்தினை உறுதிப்படுத்தி எமக்காக இருப்பினை தக்கவைக்க எமக்கான சிறந்த அரசியல்கட்டமைப்பு காணப்பட வேண்டும்

இக்கட்டமைப்பிற்கான பலமான அஸ்திவாரம் அமையவேண்டுமாயின் உள்ளூராட்சி சபைகளினை நாங்கள் வென்றெடுக்க சத்தியமானதும் சாத்தியாமானதுமான வழி எம்மக்கள் தமிழரசுக்கட்சிக்கு  ஆணைவழங்கி தமிழ்த்தேசிய கூட்டமைப்பாக தமிழரின் ஆதிக்கத்திற்குட்பட்ட அனைத்து சபைகளிலும் ஆட்சியமைக்க வேண்டும்.

சிலர் இன்னும் பெரும்பான்மை கட்சிகளோடு இணைந்து எம் மக்களை ஏமாற்றி வருகிறார்கள் . இந்த கோடரிக்காம்புகளால்

கடந்த கால அனுபவங்கள் போதாதா?

 சிந்தித்து பாருங்கள்.

 எந்த அமைச்சர் வந்து இங்கு என்னத்தை செய்தார்?

இவர்களது அபிவிருத்தி என்ற மாயையும் கசப்பு வார்த்தைகளையும் நம்ப காரைதீவு மக்கள் ஒருபோதும் தயார் இல்லை என்பதை எதிர்வரும் மே மாதம் ஆறாம் தேதி எடுத்துக்காட்டுவார்கள்.

நாம் 

தூய்மையான அரசியலை முன்னெடுத்து நிலையான அபிவிருத்தியை நோக்கி எமது இருப்பை தக்க வைக்கும் நோக்கில் செயற்படுவோம். என்றார்.