சாய்ந்தமருது பிரதேச பாடசாலைகளில் திண்மக்கழிவகற்றலை இலகுபடுத்த பள்ளிவாசல் முயற்சியால் தீர்வு.!
(அஸ்லம் எஸ்.மெளலானா)
சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை பிரதிநிதிகள், கல்முனை மாநகர ஆணையாளர் ஏ.ரி.எம். றாபி அவர்களை வெள்ளிக்கிழமை (11) மாநகர சபையில் சந்தித்து பிரதேச நலன்சார்ந்த விடயங்கள் குறித்து கலந்துரையாடியுள்ளனர்.
இந்த சந்திப்பில் நம்பிக்கையாளர் சபையின் தலைவர் டொக்டர் எம்.எச்.கே. சனூஸ் காரியப்பர், செயலாளர் பொறியியலாளர் எம்.எம்.எம்.முனாஸ், உப செயலாளர் எசார் மீராசாஹிப், சபை உறுப்பினர்களான பேராசிரியர் எம்.ஐ.எம். ஹிலால், எம்.எஸ். பஸ்லுர் ரஹ்மான், உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்.
இதன்போது சாய்ந்தமருது பிரதேசத்தை மையப்படுத்தி பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்று ஆணையாளரிடம் கையளிக்கப்பட்டதுடன் அவற்றை நிவர்த்தி செய்வது தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
குறிப்பாக திண்மக்கழிவகற்றல், வடிகான் பராமரிப்பு உள்ளிட்ட சேவைகளை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகள் மற்றும் மூலோபாய திட்டங்கள் குறித்து ஆராயப்பட்டதுடன் சில விடயங்களுக்கு சுமூக தீர்வுகள் எட்டப்பட்டுள்ளன. விஷேடமாக பாடசாலைகளின் திண்மக்கழிவுகளை அகற்றுவதில் நிலவும் அசௌகரியங்களை நிவர்த்தி செய்து, இலகுபடுத்துவதற்கான பொறிமுறைகள் குறித்து பரிசீலிக்கப்பட்டு, தீர்வு காணப்பட்டது.
அதேவேளை, திண்மக்கழிவகற்றல் சேவையை முன்னெடுப்பதில் மாநகர சபை எதிர்நோக்கும் சவால்கள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பாக ஆணையாளர் இதன்போது தெளிவுபடுத்தினார். நிதி மற்றும் வாகனப் பற்றாக்குறை, மாநகர சபை எல்லைக்குள் குப்பைகளை கொட்டுவதற்கு பொருத்தமான இடங்கள் இல்லாமை, அட்டாளைச்சேனை, பள்ளக்காட்டில் கூட தற்போது குப்பைகளை கொட்ட முடியாத சூழ்நிலை ஏற்பட்டு வருகின்றமை போன்ற பல்வேறு பிரச்சினைகளை ஆணையாளர் சுட்டிக்காட்டினார்.
இவற்றுக்கு மத்தியில் முடியுமானவரை
திண்மக்கழிவகற்றல் சேவையை வினைத்திறனுடன் முன்னெடுப்பதற்கு வர்த்தகர்கள் மற்றும் பொது மக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமாகும் என்று வலியுறுத்திய ஆணையாளர், இது விடயத்தில் பள்ளிவாசல் நிர்வாகம் முன்னின்று மக்களுக்கு தெளிவூட்டி, விழிப்புணர்வை ஏற்படுத்த முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
ஆணையாளர் முன்வைத்த கருத்துகளுடன் உடன்பட்ட பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையினர், மாநகர சபையின் சேவைகளை மேம்படுத்தும் பொருட்டு மக்களின் ஒத்துழைப்புகளை பெற்றுத் தருவதற்கு பள்ளிவாசல் நிர்வாகம் முன்னிற்கும் என்று உறுதியளித்துள்ளனர்.
இதன்போது சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசலுக்கு குப்பைகளை தரம் பிரித்து சேகரிப்பதற்கான வர்ண குப்பைத் தொட்டிகள், ஆணையாளரினால் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.




