கொழும்பு உள்ளிட்ட சில உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தல் நடவடிக்கைகளை இடைநிறுத்தி இடைக்கால தடையுத்தரவு!


கொழும்பு மாநாகர சபை உள்ளிட்ட சில உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் நடவடிக்கைகளை இடைநிறுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

தமது வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதை ஆட்சேபித்து அரசியல் கட்சிகளும் சுயேட்சை குழுக்களும் தாக்கல் செய்துள்ள எழுத்தாணை மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள அனுமதியளித்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய இந்த மனுக்கள் தொாடர்பான ஆட்சேபனைகளை எதிர்வரும் மே மாதம் 5ஆம் திகதிக்கு முன்னதாக தாக்கல் செய்யுமாறும் ஆட்சேபனைகள் தொடர்பில் எதிர்ப்புகள் இருப்பின் மே 7ஆம் திகதிக்கு முன்னர் தாக்கல் செய்யுமாறும் நீதிபதிகள் குழாம் மனுதாரர்களுக்கு உத்தரவிட்டது.

குறித்த எழுத்தாணை மனுக்கள் மீதான விசாரணை எதிர்வரும் மே​ மாதம் 16ஆம் திகதி நடத்துவதற்கும் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
அன்று வரை இந்த இடைக்கால தடையுத்தரவு அமுலில் இருக்கும் எனவும் மேன்முறையீட்டு நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.