( வி.ரி.சகாதேவராஜா)
எமது கல்முனை பிராந்தியத்தின் நீண்ட கால தேவையாக இருந்துவந்த முதியோர் இல்லம் என்ற கனவு இன்று நனவாவதை எண்ணி மகிழ்ச்சியடைகிறேன். அதற்காக அஜா இல்ல ஸ்தாபகரும் இல்லத் தலைவருமான யூடி அருள்ராஜாவிற்கு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.
இவ்வாறு கல்முனையில் அஜா முதியோர் இல்ல திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பெயர்ப் பலகையை திரை நீக்கம் செய்து வைத்த கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரி.ஜே.அதிசயராஜ் புகழாரம் சூட்டினார்.
முன்னதாக ஸ்தாபகரின் துணைவர் நாகமணி அருள்ராஜா இல்லத்தை திறந்து வைத்தார்.
குடும்பத்தால் கைவிடப்பட்ட அல்லது தனிமையை உணர்கின்ற முதியோர்களுக்காக நேற்று முன்தினம் (5) சனிக்கிழமை கல்முனையில் அஜா(AJAA) இல்லம் திறந்து வைக்கப்பட்டது.
அம்பாறை மாவட்டத்தில் பெண்களுக்காக முதன் முதலில் ஆரம்பமாகும் இம் முதியோர் இல்லத் திறப்பு விழா அஜா இல்ல ஸ்தாபகரும் இல்லத் தலைவருமான திருமதி சோதினி அருள்ராஜ்( ஜுடி) தலைமையில் நடைபெற்றது.
சர்வசமய பிரதிநிதிகள் கலந்து கொண்டு ஆசீர்வாதம் வழங்கினர். கவிஞர் பூவை சரவணனின் கவிதை இடம்பெற்றது.
அங்கு அவர் மேலும் பேசுகையில்..
முதியோர் முதிர்ச்சி என்பது
இயற்கையானது. எங்கள் அனைவருக்கும் அது பொதுவானது. துரதிர்ஷ்டவசமாக சிலருக்கு அந்த இறுதிக் காலம் மகிழ்ச்சியாக இருக்கும். இன்னும் சிலருக்கு துன்பமாக இருக்கும்.
பிள்ளைகள் சிலருக்கு கைகொடுப்பதில்லை. சிலர் கைவிடப்பட்ட நிலையிலிருப்பர்.
எனவே எமது பிராந்தியத்தில் இத்தகைய முதியோர் நிலையம் மிகவும் அவசியம். அதனை திருமதி யூடி அருள்ராஜா செயற்படுத்த முன்வந்தமைக்கு வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.
நாங்கள் பலபேர் பல விடயங்களை மனதிற்குள் நினைத்துக் கொண்டிருக்கின்றோம். ஆனால் செய்ய முயற்சிப்பதில்லை.சமூக தொடர்பான சிந்தனை கவலை எங்களுக்குள் இருக்கின்றது. பிரச்சனைகள் தீர்த்து வைப்பதிலே நாங்கள் செயல்பட வேண்டும் .
பல்வேறு தியாகங்களை செய்ய வேண்டும் .முயற்சிகள் அர்ப்பணிப்பு நல்ல சிந்தனை முக்கியமாக அந்த தூய சிந்தனை இருக்க வேண்டும் .அதன் வெளிப்பாடு திருமதி யூடி அருள்ராஜ் ஜினால் நடைமுறைக்கு வந்துள்ளதில் மகிழ்ச்சி.என்றார்.
திறப்பு விழாவில் கல்முனை பொலிஸ் நிலைய நிருவாக பொறுப்பதிகாரி ஏ.றபீக், ஓய்வு நிலை உதவிக் கல்விப் பணிப்பாளர் விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா, ஓய்வு நிலை அதிபர் கா.சந்திரலிங்கம் உள்ளிட்ட அதிதிகள் கலந்து கொண்டனர்.
இல்ல ஸ்தாபகரும் இல்லத் தலைவருமான திருமதி சோதினி யூடி அருள்ராஜா பேசுகையில்..
இந்த இல்லத்தில் முதலில் குடும்பத்தால் கைவிடப்பட்ட அல்லது ஆதரவற்று தனிமையான வயோதிப பெண்களுக்கு இடம் அளிக்கப்பட இருக்கிறது .
பின்னர் ஆண்கள் சிறுவர்கள் என இணைத்துக் கொள்ளப்பட இருக்கிறார்கள்.இங்கே முக்கியமாக உளவளஆலோசனை வழங்கப்படும்.
இவ் ஆலோசனை இல்லத்தில் தங்கியிருப்பவர்களுக்கும் வெளியிலிருந்து ஆலோசனை தேவைப்படுவோருக்கும் வழங்கப்படவுள்ளது.
இந்த இல்லம் எனது கனவு. இதனை நனவாக்க பலரும் பல கோணங்களில் உதவினார்கள். அனைவருக்கும் நன்றிகள். என்றார்.
இல்ல நிருவாகசபை செயலாளர் திருமதி றீசா பத்திரண நன்றியுரையாற்றினார்.
இந்த இல்லம் ஸ்தாபகர் திருமதி சோதினி அருள்ராஜ்ஜின் பெற்றோர்களான ராஜேஸ்வரி கதிரவேல் மற்றும் கதிரவேல் சின்னத்தம்பி ஆகியோரது ஞாபகார்த்தமாக திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.