( வி.ரி. சகாதேவராஜா)

இன்று கணனியே கவிதை எழுத தொடங்கி விட்டது.
எனவே அதனை முந்துவதற்கு எங்களை நாங்கள் தகவமைத்துக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு கல்முனை நற்பிட்டிமுனையைச் சேர்ந்த எழுத்தாளர் சதானந்தம் ரகுவரன் எழுதிய “பிரசவம்” என்ற கன்னிக்கவிதை தொகுப்பு நூல் வெளியீட்டு விழாவில் பிரதான உரையாற்றிய கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் சரவணமுத்து நவநீதன் தெரிவித்தார்.

பிரசவம் நூல் வெளியீட்டு விழா நேற்று (6) ஞாயிற்றுக்கிழமை கல்முனை வடக்கு பிரதேச செயலக மண்டபத்தில் கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் தி.ஜே. அதிசயராஜ் தலைமையில் நடைபெற்றது .

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்..
மிக இலகுவாக சமூகத்தில் அங்கீகாரம் கிடைப்பதாக இருந்தால் அவர் ஒரு எழுத்தாளராக இருக்கவேண்டும் என்பார்கள்.ஒருவர் நல்ல எழுத்தாளராக வர வேண்டுமாக இருந்தால் சிறந்த வாசிப்பாளராக இருக்க வேண்டும்.
இன்றேல் நாம் இலக்கிய உலகில் பிரகாசிக்க முடியாது. காலாதியாகி விடுவோம்.

கிழக்கு மாகாணத்தில் கடந்தாண்டு வெளிவந்த கவிதைத் தொகுப்பு நூல்கள் 37 எமக்கு விருதுக்காக கிடைக்கப்பெற்றன.
இதனை தரம் பிரித்து 32 நூல்கள் விருதுக்கு தெரிவுக்காக நடுவர்களிடம் ஒப்படைத்தோம். இதில் என்ன புதுமை என்றால் கிடைத்த அத்தனையும் புதுக்கவிதைகள் .ஒரு மரபுக் கவிதை கூட கிடைக்கவில்லை .
அப்படி எனின் மரபுக் கவிதை எழுதுவது கடினமா? அல்லது புதுக்கவிதை எழுதுவது இலேசா? அல்லது இளம் எழுத்தாளர்களை நாங்கள் ஊக்குவிக்க தவறிவிட்டோமா? என்ற கேள்விகள் எழுகின்றன.

நேற்று அக்கரைப்பற்றிலே எமது திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட மறைந்த எழுத்தாளர் அ.ஸ.அப்துல் சமதுவின் ஞாபகார்த்தமாக ஆக்க இலக்கியங்களில் இளையோரின் வகிபாகம் என்று தலைப்பிலே ஒரு ஆய்வுரையை தென் கிழக்கு பல்கலைக்கழக மொழித்துறை விரிவுரையாளர் அப்துல் ரசாக் நிகழ்த்தினார்.
அப்பொழுது அவர் இப்படி கூறினார். அதாவது பெரிய நீலாவணை தொடக்கம் பாணமை வரைக்குமான நீண்ட பரப்பில் தான் பார்த்த நூறு நூல்களை பட்டியலிட்டார்.
அவர் பார்த்த அந்த 100 நூல்களிலே 93 நூல்கள் கவிதை நூல்களாம். ஆக நான்கு நூல்கள் தான் சிறுகதை நூல்களாம். ஆக ஒரு நூல் நாவலாக இருந்ததாம்.
இது எதைக் காட்டுகின்றது? தமிழ் இலக்கியத்தில் கூடுதலாக கவிதை நூல்கள் தான் படைக்கப்படுகின்றன.

அப்படி எனின் கவிதை எழுதுவது எளிதா? கேள்வி எழுப்புகின்றது

எனவே நாம் இலக்கியத்தின் பல கோணங்களிலும் படைப்புகளை படைக்க முன்வர வேண்டும். அதனூடாக நல்லதொரு சமுதாயத்தை கட்டி எழுப்ப வேண்டும் என்றார்.

சிறப்பு அதிதியாக பிரபல எழுத்தாளர் உமா வரதராஜன் கலந்து சிறப்பித்தார். மேலும் மருத்துவர் நடராஜா ரமேஸ் உள்ளிட்ட பல அதிதிகள் கலந்து கொண்டனர்.

நூல் நயவுரையை தென்கிழக்கு பல்கலைக்கழக பிரதிப் பதிவாளர் சஞ்சீவி சிவகுமார் நிகழ்த்தினார்.

விழாவில் நூலாசிரியர் சதானந்தம் ரகுவரன் ஏற்புரை நிகழ்த்தினார். அவரின் பெற்றோர் குடும்பம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் காணிப்பிரிவு போதனாசிரியராக அரச கடமை ஆற்றும் சதானந்தன் ரகுவரனின் முதலாவது இலக்கிய படைப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.