இன்று சுவாமி விபுலாநந்த அடிகளாரின் 133ஆவது ஜனன தினம்!
உலகின் முதல் தமிழ்ப் பேராசிரியர் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்த அடிகளாரின் 133வது ஆண்டு ஜனன தினம் இன்று (27.03.2025- வியாழக்கிழமை) ஆகும்.
அடிகளார் 1892.03.27ஆம் திகதி இவ் அவனியில் அவதரித்து 1947.07.19ஆம் திகதி மகா சமாதி அடைந்தார். இன்றுடன் அவர் இவ் வையகத்தில் அவதரித்து 133 வருடங்களாகின்றது.அவர் மகாசமாதியடைந்து 77வருடங்களாகின்றன. ஆக வாழ்ந்த காலம் 55வருடங்கள்.
அடிகளார் ஆற்றிய அளப்பரிய பணிகளை இன்றும் தமிழ்கூறு நல்லுலகம் நினைவில் கொண்டிருக்கிறது.-
இயல்இசைநாடகம் ஆகிய முத்தமிழிலும் சிறந்து விளங்கிய காரணத்தால் முத்தமிழ் வித்தகர் எனப் போற்றப்பட்டவர் சுவாமி விபுலாநந்தர்.
அவர் பல்துறை சார்ந்த பேரறிஞர். ஆசிரியராக, பண்டிதராக, விஞ்ஞானப் பட்டதாரியாக, பாடசாலைகளின் முகாமையாளராக, பல்கலைக்கழகங்களில் தமிழ்த்துறைப் பேராசிரியராக, அறிஞராக, ஆராய்ச்சியாளராக, மொழிபெயர்ப்பாளராக, முத்தமிழ் வித்தகராக விளங்கியவர் விபுலானந்தர்.சமூகத் துறவியாக வாழ்ந்து செய்த தொண்டுகளும் தமிழுக்காற்றிய சேவைகளும் அவரை என்றும் நினைவுகூரச் செய்வனவாகும்.
உலகின் முதல் தமிழ் பேராசிரியர் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளார் இந்தியாவில் இராமகிருஷ்ண மிஷனின் “இராமகிருஷ்ண விஜயம்” என்று தமிழ் சஞ்சிகைக்கும், “பிரபுத்த பாரத ” “வேதாந்த கேசரி” என்ற ஆங்கில சஞ்சிகைக்கும் பிரதம ஆசிரியராக 1924 களில் பணியாற்றி இருந்தார். பின்னர் 1926 களில் கொழும்பில் இருந்து வெளிவந்த “விவேகானந்தன்” என்ற இதழின் ஆசிரியராக பணியாற்றினார்.
அதாகப்பட்டது இலங்கையின் முதலாவது தமிழ் பிரதம ஆசிரியராக இலங்கையரான தமிழ் இந்து துறவி சுவாமி விபுலானந்த அடிகளார் மிளிர்கின்றார் என்றால் அது மிகைப்பட்ட கூற்றல்ல.
தமிழ் கூறும் நல்லுலகம் போற்றுகின்ற ‘யாழ்நூல்’ என்னும் பொக்கிசத்தைத் தரணிக்குத் தந்த சுவாமி விபுலானந்தர்
பாரதியை மகாகவியாக படித்த மக்களிடையே உலவ விட்டவர் என்பது பலருக்குத் தெரியாத விடயம்.
சுவாமி விபுலானந்த அடிகள் மக்கள் எல்லோரையும் சமமாக மதித்தார்.கல்வி எல்லோருக்கும் பொதுவானது என்று நினைத்தார். தீண்டத்தகாதவர் என்று ஒதுக்கி வைக்கப்பட்ட மக்களுக்கும் கல்வி கிடைப்பதற்கு வழிசமைத்தார்.
ஆங்கிலக் கல்வியினை இவர் முதலில் கல்முனையிலுள்ள மெதடிஸ்ற் கல்லூரியிலும் பின்னர் மட்டக்களப்பிலுள்ள மைக்கேல் கல்லூரியிலும் கற்றார். இவர் 16வது வயதிலேயே கேம்பிரிட்ஜ் பரீட்சையில் சித்தியெய்தினார். 1916இல் மதுரைத் தமிழ்ச் சங்கப் பண்டிதர் தேர்விலும் வெற்றி பெற்று ‘இலங்கையின் முதலாவது மதுரைத் தமிழ்ச் சங்கப் பண்டிதர்’ என்னும் பெருமையையும் பெற்றார். 1919இல் லண்டன் பல்கலைக்கழகம் நடத்திய பி.எஸ்.சி தேர்விலும் சித்தியடைந்தார்.
கொழும்பு அரசினர் தொழிநுட்பக் கல்லூரியில் உதவி விரிவுரையாளராக பணியாற்றினார். மயில்வாகனனாரின் விரிவுரைகள் மாணவர் மத்தியில் பெரும் சிறப்பைத் தேடிக் கொடுத்தன. அதனால் 1917ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் சம்பத்தரிசியார் கல்லூரிக்கு விஞ்ஞான ஆசிரியராக விரும்பி அழைத்தனர். அதனை பெருவிருப்புடன் ஏற்றுக் கொண்டார்.
மயில்வாகனனாரின் மொழிப்புலமையையும் ஆற்றலையும் அறிந்த மானிப்பாய் இந்துக்கல்லூரி முகாமையாளரும் திருப்புகழ்சிவப்பிரகாசம்,சிவஞான சித்தியார் என்பவற்றுக்கு உரை எழுதியவருமான வழக்கறிஞர் திருவிளங்கத்தாரின் வேண்டுகோளுக்கிணங்கி மானிப்பாய் இந்துக்கல்லூரியின் அதிபர் பதவியை ஏற்றுக் கொண்டார். திருகோணமலை கோணேஸ்வரா இந்துக் கல்லூரியில் 1925ஆம் ஆண்டிலிருந்து முகாமையாளராகக் கடமையாற்றிய சுவாமி விபுலானந்தர் 1928இல் அதிபர் பதவியையும் ஏற்றுக் கொண்டார்.
1924இல் சென்னை சென்ற மயில்வாகனனார் இராமகிருஷ்ண சங்கத்தில் சேர்ந்து ‘பிரபோத சைதன்யர்’ என்னும் பெயர் பெற்றார். அதே ஆண்டு சித்திரைப் பௌர்ணமியில் துறவறம் மேற்கொண்டு சுவாமி சிவானந்தரால் ‘சுவாமி விபுலானந்தர்’ என்னும் நாமம் சூட்டப் பெற்றார். கல்லடி உப்போடையில் விபுலானந்தர் தாம் அமைத்த பாடசாலைக்கு சிவானந்த வித்தியாலயம் என நாமம் சூட்டியது தமது குருவின் ஞாபகார்த்தமாகவே.
1925இல் இலங்கை திரும்பிய அடிகளார் கல்லடி உப்போடையில் சிவானந்தா வித்தியாலயமும் காரைதீவில் சாரதா மகளிர் கல்லூரியும் மற்றும் ஆதரவற்றோர் மாணவர்மாணவியர் இல்லங்களும் நிறுவி அளப்பெரிய கல்வித் தொண்டு செய்தார். பின்பு யாழ்ப்பாணம் வைத்தீஸ்வரா வித்தியாலயத்தையும் திருகோணமலை இந்துக் கல்லூரியையும் இராமகிருஷ்ண சங்கத்தோடு இணைத்ததோடு நில்லாது மலையகத்திலும் பாடசாலைகள் அமைத்து சகலருக்கும் சிறந்த கல்வித் தொண்டாற்றினார். மேலும் இராமகிருஷ்ணமிஷன் மேற்கொள்ளும் கல்விப் பணிகளை ஒருங்கமைத்தார்.
1931இல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதல் தமிழ்ப் பேராசிரியராகவும,1943இல் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் முதல் தமிழ்ப் பேராசிரியராகவும் பணி புரிந்தார். அத்தனை சிறப்போடு மொழியியல் விஞ்ஞானியாகஇஅறிவியல் கலைஞராக,ஆத்மீக ஞானியா,ஆற்றல் மிகு பேராசிரியரா,இயற்றமிழ் வல்லுனரா,இசைத்தமிழ் ஆராய்ச்சியாளராக பல பணிகள் புரிந்தார். 1943ஆம் ஆண்டில் இலங்கையில் பல்கலைக்கழகம் இயங்கத் தொடங்கிய போது தமிழ்த் துறையின் முதலாவது பேராசிரியராக பலரின் வேண்டுகோளிற்கிணங்க பணிபுரிய இணங்கினார். தமிழ் ஆய்வுத் துறையில்த எவ்வழியில் செல்ல வேண்டுமென்ற திட்டங்களை சுவாமி விபுலானந்தரே வகுத்தார்.
யாழ்நூல், மதங்கசூளாமணி, கணேச தோத்திரப் பஞ்சகம், குமர வேணவ மணிமாலை, நடராஜ வடிவம் என்பன அடிகளாரின் பிரதான நூல்களாகக் காணப்படுகின்றன. மேலும் இலக்கியம், இசை,சமயம, மொழியியல், கல்வி, அறிவியல் சம்பந்தமாக எண்ணிறைந்த கட்டுரைகளையும் நூல்களையும் வெளியிட்டு தமிழுக்கும் கல்விக்கும் தொண்டாற்றியுள்ளார். மேலும் விவேகானந்த ஞானதீபம், சம்பாசனைகள் (1924, கருமயோகம் (1934, ஞான யோகம் (1934 நம்மவர் நாட்டு ஞான வாழ்க்கை (1941, விவேகானந்தரின் பிரசங்கம் (1934, அறிவியல் சம்பந்தமான எந்திரவியல் (1933, கலைச்சொல்லாக்க மாநாட்டுத் தலைமையுரை (1936) கலைச் சொற்கள் வேதிநூல் (1938, மின்சார சாத்தி வரலாறு,விஞ்ஞான தீபம் (1922, விஞ்ஞான தீபம்- மொழிபெயர்ப்பு முறை (1922) போன்ற நூல்களையும் எழுதி வெளியிட்டுள்ளார்.
அக்காலத்தில் தமிழகத்தில் எண்ணற்ற தமிழறிஞர்கள் இருந்தும் சங்கத் தமிழில் சிறந்தவர்கள் தமிழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் சாமிநாதையர் மற்றும் இலங்கையைச் சேர்ந்த விபுலானந்தர் மட்டுமே என்னும் புகழாரம் அடிகளாருக்கு மட்டுமல்ல இலங்கைத் தமிழருக்கும் பெருமை தேடித் தந்தது.
அப்படி ஈழம் முதல் பணி இமயம்வரை கொடி கட்டிய இசைத்தமிழனான அடிகளாரின் 133வது ஜனனதினவிழா உலகின் எட்டுத்திக்கிலும் புகழ்பரப்ப பரவலாக கொண்டாடப்படவேண்டும் என்பதே எமது வேணவா.
விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா.
முன்னாள் தலைவர்,
இந்நாள் ஆலோசகர் சுவாமி விபுலாநந்த ஞாபகார்த்த பணிமன்றம். காரைதீவு








