-வி.ரி.சகாதேவராஜா_
இலங்கையில் உலக முத்தமிழ் மாநாடு மூன்று இடங்களில் நடாத்த இருக்கும் சூழ்நிலையில், முத்தமிழுக்கு துறை போன உலகின் முதல் தமிழ் பேராசிரியர் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளார் பிறந்த மட்டக்களப்பு மாநிலத்தில் நடாத்த சம்பந்தப்பட்ட தரப்பினர் முன்வராதிருப்பது ஏன் என மக்கள் கவலை தெரிவிக்கின்றார்கள்.
சென்னையில் இயங்கும் உலக தமிழ் சங்கம் எதிர்வரும் ஜூலை மாதம் இலங்கையில் மூன்று தினங்கள் மாபெரும் முத்தமிழ் விழாக்களை யாழ்ப்பாணம், கொழும்பு, நுவரெலியா ஆகிய பிரதேசங்களில் நடத்த உள்ளது.
இவ்விழா தொடர்பாக அந்த சங்கத்தின் தலைவர் பேராசிரியர் டாக்டர் டி. இளங்கோ இலங்கை வருகை தந்து ஏற்பாடுகளை செய்து வருகிறார்.
மட்டக்களப்பு மாநிலத்தில் கிழக்கு பல்கலைக்கழகம், விபுலானந்த அழகியல் கற்கை நிறுவனம், இராமகிருஷ்ண மிஷன்,
தமிழ்ச் சங்கம் மற்றும் பல தமிழ் அமைப்புகள் இயங்கு நிலையில் உள்ளன.
முத்தமிழ் தவழ்ந்து விளையாடும் மட்டக்களப்பு மாநிலத்தில் ஒரு முத்தமிழ் மாநாட்டை நடாத்த முன்வர வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
சம்பந்தப்பட்டவர்கள் கவனம் எடுப்பார்களா?
வித்தகர் விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா
காரைதீவு நிருபர்