45 சிறுவர் கழகங்களுக்கிடையிலான எல்லே சுற்றுப்போட்டியில் மாங்காடு வெற்றி
( வி.ரி.சகாதேவராஜா)
மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக பிரதேச சிறுவர் சபையின் ஏற்பாட்டில் நடாத்தப்பட்ட சிறுவர் கழகங்களுக்கிடையிலான எல்லே சுற்றுப்போட்டியானது நேற்று (2025.03.21) பிரதேச செயலாளர் உ. உதயஸ்ரீதர் தலைமையில் களுதாவளை பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
விளையாட்டின் ஊடாக உள விருத்தி என்ற நோக்குடன் சிறுவர் கழகங்களின் செயற்திறனை அதிகரித்தல், விளையாட்டு திறனை மேம்படுத்தும் முகமாக ஏற்பாடு செய்திருந்த இந்த போட்டியில் கல்லாறு, எருவில், மாங்காடு என 3 வலயங்களாக பிரிக்கப்பட்டு 45 சிறுவர் கழகங்கள் பங்கேற்றன.
இறுதிப்போட்டிக்கு மாங்காடு மற்றும் கல்லாறு வலய சிறுவர் கழகங்கள் தெரிவுசெய்யப்பட்ட நிலையில், மாங்காடு வலய சிறுவர் கழகமானது வெற்றிக்கிண்ணத்தை சுவீகரித்துக்கொண்டது.
இந்த நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் சத்யகெளரி தரணிதரன்,சமூர்த்தி முகாமைத்துவப்பபணிப்பாளர் மற்றும் பிரதேச செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், மாவட்ட சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர், LOH நிறுவன பணிப்பாளர் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
இந்த சுற்றுப்போட்டிக்கு LOH மற்றும் CERI அமைப்புக்கள் அனுசரணை வழங்கியதுடன், பிரதேச செயலக சிறுவர் பெண்கள் பிரிவு மற்றும் கிராமமமட்டத்திலிருந்து சமுர்த்தி பிரிவு சிறுவர் கழகங்களை வினைத்திறனுடன் பங்கேற்பதற்கான ஒழுங்கமைப்புக்களை செய்திருந்தனர்.
மேலும் பிரதேச செயலக சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர்களான ம. புவிதரன் மற்றும் செ சக்திநாயகம் ஆகியோர் இணைந்து இந்த சுற்றுப்போட்டியை ஒருங்கிணைப்பு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.










