அம்பாறை மாவட்டத்தில் தெஹியத்தகண்டிய பிரதேச சபைக்கான வேட்புமனு தாக்கல் 25, 26,27 களில் நடக்கும்!
அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேவிக்ரம தகவல்!
( வி.ரி.சகாதேவராஜா)
உள்ளூராட்சி தேர்தலுக்காக அம்பாறை மாவட்டத்தில் ஏலவே நீதிமன்ற செயற்பாடு காரணமாக விடுபட்டிருந்த தெஹியத்தகண்டிய பிரதேச சபைக்கான வேட்புமனுத்தாக்கல் எதிர்வரும் 25, 26, 27 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.
அதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ளது என்று
அம்பாறை மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும் அரசாங்க அதிபருமான சிந்தக அபேவிக்ரம தெரிவித்தார்.
அதற்கான வர்த்தமானி அறிவித்தலும் வெளியாகியுள்ளது.
மேலும் ஏலவே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மன்னார் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் இரு உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலும் ஏக காலத்தில் நடைபெறவுள்ளன.
இதேவேளை உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக கடந்த (17) திங்கட்கிழமை ஆரம்பமான வேட்புமனுத் தாக்கல் அம்பாறை மாவட்ட செயலகத்தில் நேற்று (20) வியாழக்கிழமை வரை ஏற்றுக் கொள்ளப்பட்டன.
இம்மாவட்டத்தில் உள்ள தொகுதிகளின் எண்ணிக்கை 04 மற்றும் உள்ளூராட்சி சபைகளின் எண்ணிக்கை 20ஆகும்.
ஆனால் , கல்முனை மாநகர சபை மற்றும் தெஹித்தக்கண்டிய பிரதேச சபை ஆகிய உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் நீதிமன்ற காரணங்களால் தற்போது நடைபெறமாட்டாது. ஏனைய 18 சபைகளுக்கான தேர்தல் நடைபெறும் என ஏலவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இருப்பினும் தற்போது தெஹியத்தகண்டிய பிரதேச சபைக்கான தேர்தல் நீதிமன்ற விடுவிப்பு காரணமாக, ஏனைய 18 சபைகளுக்கான தேர்தல் நடைபெறும் அதே தினத்தில் நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.