QR code  மூலமான முறைப்பாட்டை  உரிய ஆதாரங்களுடன் முன்வையுங்கள் -சுகாதார வைத்திய அதிகாரி Dr  ஜே. மதன்  

பாறுக் ஷிஹான்

நோன்பு கால உணவுப் பாதுகாப்பின் நிமிர்த்தம் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட  உணவகங்களில் புதன்கிழமை (19) திடீர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

பொதுமக்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற   QR code  மூலமான முறைப்பாடு  மற்றும் நேரடியாக வழங்கப்பட்ட முறைப்பாடு என்பனவற்றை அடிப்படையாக கொண்டு அதன் உண்மைத்தன்மையை அறிய சில உணவு கையாளும் நிறுவனங்களில் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் ஆலோசனைக்கமைய சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி  வைத்தியர்  ஜே. மதன்   தலைமையில்  பொது சுகாதார பரிசோதகரினால் இப்பரிசீலனை செய்யப்பட்டதுடன் இதன் போது சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாத உணவகங்களுக்கு எதிராக  வழக்குத் தாக்கல் செய்வதற்கு உத்தேசிக்கப்பட்டது.
 
அத்துடன் தற்போதைய நோன்பு கால உணவுப் பாதுகாப்பின் நிமிர்த்தம்  மக்களின் உணவு பாதுகாப்பை உறுதி செய்வது எமது கடமையும் பொறுப்பும் ஆகும் .பொதுமக்கள் தங்கள்  முறைப்பாடுகளை உரிய ஆதாரங்களுடன் எமக்கு  QR code ஊடாக முறைப்பாடுகளை முறையாக வழங்கும்  பட்சத்தில் விரைவாக நடவடிக்கைகள் மேற்கொள்ள முடியும் என எமது செய்தியாளர் பாறுக் ஷிஹானிடம் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி குறிப்பிட்டார்.

இதே வேளை சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட பலசரக்கு கடைகள் சிலவும் திடீர் பரிசோதனை செய்யப்பட்டன.இதன் போது மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற  வகையில் காணப்பட்ட உழுவா  மற்றும் மாசி கைப்பற்றப்பட்டதுடன் அக்கடையின் உரிமையாளருக்கு எதிராக வழக்குத் தாக்கல்  செய்யப்பட்டது.

  
மேலும் சந்தேகத்திற்கிடமான வகையில் காணப்படும்  கறுப்பு மிளகின் மாதிரி பெறப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேற்படி நடவடிக்கையில் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர்  ஜே. மதனின்  ஆலோசனை மற்றும் வழிகாட்டலில்  பொதுச் சுகாதார பரிசோதகர்கள்   மற்றும் டெங்கு களத்தடுப்பு  பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.