மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பாதுகாப்பு பிரிவுக்கு சொந்தமான வாகனம் மற்றும் வெடி பொருட்களுடன்; விமானப்படை வீரர் ஒருவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்னதாக தெரியவருகின்றது.
திங்கட்கிழமை (17.03.2025) அதிகாலை வேளையில் வெல்லாவெளி பகுதியில் ரோந்து நடவடிக்கைக்குச் சென்ற பொலிஸார் அப்பகுதியில் வந்த வாகனம் ஒன்றை சோதனை செய்தபோது அதில் வெடிபொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
குறித்த வாகனத்திலிருந்து வெடிபொருட்கள், வயர்கள், ஒரு வகையான திரவம் அடங்கிய போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கைப்பற்றப்பட்ட வாகனம் பாதுகாப்பு பிரிவுக்கு சொந்தமான வாகனம் எனவும், குறித்த நபர்கள் புதையல் எடுக்கும் நோக்குடன் அப்பகுதிக்கு வந்திருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இது தொடர்பிலான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், கைப்பற்றப்பட்ட பொருட்கள், கைப்பற்றப்பட்ட வாகனம் மற்றும் கைதுசெய்யப்பட்ட நபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.