பனங்காடு பாசுபதேசுவரர் வித்தியாலயத்தில் செலான் வங்கியினரால் அமைக்கப்பட்ட 269 ஆவது நூலகத்தின் திறப்பு விழா

வி.சுகிர்தகுமார்       

 செலான் பஹசர நூலக செயற்திட்டத்தின் கீழ் பாடசாலைகளுக்கு நூலகங்களை அமைத்துக்கொடுக்கும் வேலைத்திட்டத்திற்கு அமைய திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட பனங்காடு பாசுபதேசுவரர் வித்தியாலயத்தில் செலான் வங்கியினரால் அமைக்கப்பட்ட 269 ஆவது நூலகத்தின் திறப்பு விழா இன்று (12) நடைபெற்றது.


பாடசாலையின் அதிபர் த.இந்திரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் செலான் வங்கியின் கிழக்கு மாகாண பிராந்திய முகாமையாளர் றிஸ்னி ஹுசைன் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் சிறப்பு அதிதிகளாக ஆலையடிவேம்பு பிரதேச  செயலாளர் திரு.ஆர்.திரவியராஜ் , ஆலையடிவேம்பு கோட்டக்கல்வி பணிப்பாளரும் பிரதிக்கல்விப்பணிப்பாளருமான திரு.கீ.கமலமோகனதாஸன் செலான் வங்கியின் கிழக்கு பிராந்திய கடன் முகாமையாளர் திருமதி சுகன்யா கமலரூபன் அக்கரைப்பற்று கிளை முகாமையாளர் ஜோசப் ஜெயமேனன் பாடசாலை அபிவிருத்திக்குழு செயலாளர் பிரபு உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.


வரவேற்பு மற்றும் தேசிய கொடியேற்றலுடன் ஆரம்பமான நிகழ்வில் அதிதிகள் இணைந்து நூலகத்தின் பெயர்ப்பலகையினை திரைநீக்கம் செய்து வைத்தனர்.
இதன் பின்னராக தேசிய ரீதியில் அமைக்கப்பட்ட 269 ஆவது நூலகத்தினை நாடா வெட்டி திறந்து வைத்தனர்.


தொடர்ந்து ஆசியினை பாசுபதேசுரர் ஆலய உதவிக்குரு சிவஸ்ரீ கோபிசர்மா வழங்கினார். இதேநேரம்; நூலகத்திற்கு தேவையான மடிக்கணிணிகளை பிரதம அதிதி அதிபரிடம் கையளித்தார்.


பின்னர் பாடசாலை வளாகத்தினுள் மரநடுகை இடம்பெற்றதுடன் பாடசாலை அரங்கில் இடம்பெற்ற கலைநிகழ்வுகளையும் அதிதிகள் கண்டு களித்தனர்.


நூலகத்திற்கு தேவையான நூல்களை அதிபரிடம் அதிதிகள் கையளித்ததுடன் மடிக்கணிணி மற்றும் புரொஜெக்டரினையும் வழங்கி வைத்தனர்.
செலான் வங்கியினால் மாணவர்களின் நலன்கருதி திறந்து வைக்கப்பட்ட சேமிப்பு கணக்கு புத்தகங்களும் வழங்கி வைக்கப்பட்டது.


நிகழ்வில் பிரதி அதிபர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் பாடசாலை அபிவிருத்திக்குழு உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.