உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தமிழரசுக்கட்சி தனித்தே போட்டியிடும்-எம். ஏ. சுமந்திரன்
பாறுக் ஷிஹான்
உள்ளூராட்சி சபை தேர்தல் எதிர்கொள்வது தொடர்பில் அம்பாறை மாவட்ட தமிழரசுக்கட்சி முக்கியஸ்தர்களின் கலந்துரையாடல் அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்புப் பகுதியில் சனிக்கிழமை(8) இரவு பொத்துவில் தொகுதி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான க.கோடீஸ்வரனின் ஏற்பாட்டில் நடைபெற்றது.
இதன் போது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியும் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமான எம். ஏ. சுமந்திரன் கல்முனைத் தொகுதித் தலைவர் அ.நிதான்சன் சம்மாந்துறை தொகுதியின் தலைவரும் மு.நாடாளுமன்ற உறுப்பினருமான த.கலையரசன் மற்றும் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர்களும் கலந்து கொண்டு தீர்மானங்கள் எட்டப்பட்டது.
மேலும் இக்கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளராக தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன் கல்முனைத் தொகுதி சார்பிலும் அம்பாறை மாவட்டம் சார்பிலும் நாடாளுமன்ற உறுப்பினர் க .கோடீஸ்வரன் மற்றும் பொன்.செல்வநாயகம் ஆகியோரால் கௌரவிக்கப்பட்டார்.
இதேவேளை தமிழ் தேசிய கூட்டமைப்பாக போட்டியிடும் பேச்சுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தமிழரசுக்கட்சி இம்முறை தனித்தே போட்டியிடுகின்றது எனவும் எதிர்வரும் வாரத்திற்குள் இலங்கை தமிழரசுக்கட்சியின் வேட்பாளர் பட்டியலை இறுதி செய்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தமிழரசுக்கட்சி பதில் பொதுச்செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இதன்போது இக்கூட்டத்தில் உள்ளூராட்சி சபை தேர்தல் எதிர்கொள்வது தொடர்பில் ஆராயப்பட்டதுடன் அம்பாறை மாவட்டத்தில் உள்ள அனைத்து சபைகளும் கைப்பற்றப்படல் வேண்டும் பெண்கள் பிரதிநிதித்துவம் இளைஞர்களுக்கு தேர்தலில் பங்கேற்க வாய்ப்பு வழங்குதல் உட்பட இலங்கை தமிழரசுக்கட்சியானது இம்முறை உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன் வேட்பாளர்கள் தெரிவு தொடர்பிலும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.
இந்த கூட்டத்தில் கட்சியின் முக்கியஸ்தர்கள் வட்டாரக்கிளை தலைவர்கள் மாவட்ட கிளை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.










