வி.சுகிர்தகுமார்

கட்டாக்காலி கால்நடைகளின் தொல்லையால் அநியாய உயிரிழப்புக்கள் அம்பாரை மாவட்டத்தில் அதிகரித்து வருவதுடன் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவிலும் பொதுமக்கள் நாளாந்தம் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்து வருகின்றனர்.


வாகன விபத்துக்களும் இதனால் அதிகரித்துள்ளதுடன் வாகன சாரதிகளும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். காலையிலும் மாலையிலும் கால்நடைகள் பிரதான வீதிகளில் அலைந்து திரிவதுடன் வீதியின் நடுவிலும் படுத்துறங்குவதை அவதானிக்க முடிகின்றது.


இதேநேரம் உள்வீதிகளிலும் கால்நடைகள் படுத்துறங்குவதால் பாடசாலை செல்லும் மாணவர்களும் பெரும்சிரமத்திற்குள்ளாகுவதாக பெற்றோர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.


இதேநேரம் சில இடங்கள் கால்நடைகளின் தங்குமிடமாகவும் மாறியுள்ளதை காணமுடிகின்றது. இது தொடர்பில் சம்மந்தப்பட்ட அதிகாரிகளோ அல்லது காவல் துறையினரோ தக்க நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் பொதுமக்கள் விசனம் தெரிவித்து வருகின்றனர்.


ஆகவே கட்டாக்காலி கால்நடைகளின் உரிமையாளர்கள் தங்களது கால்நடைகளை பொதுமக்களுக்கு இடைஞ்சல் ஏற்படாதவாறு பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் அல்லது சம்மந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.