துறைநீலாவணை நிருபர் செ.பேரின்பராஜா
142 வருட வரலாற்றைக் கொண்ட கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி மிகவும் சிறப்பாக இடம் பெற்றது
கல்முனை வலயக்கல்விப்பணிப்பாளர் உரை
இன்றைய மாணவர்கள் ஒரு சிறந்த தீர்மானத்தை சுயமாக எடுக்க முடியாதவர்களாகவும் ஒரு விடயதானத்தை முன்னெடுக்க துணிந்து முன்னுக்கு வர முடியாதவர்களாகவும் உள்ளனர் என்று அவர்களின் பெற்றோர் கவலையடைகின்றனர் இந் நிலையில் இருந்து எமது மாணவ சமுதாயத்தை மீட்டெடுக்க வேண்டுமாயின் சகல பாடசாலைகளும் தம்மிடம் உள்ள வளங்களை நல்ல முறையில் பயன்படுத்தி கற்றல் கற்பித்தலுக்கு சமாந்தரமாக இணைக் கலைத்திட்ட செயற்பாடுகளை முறையாக முன்னெடுக்க வேண்டியது காலத்தின் தேவையாகும்.
இவ்வாறு கல்முனை வலயக் கல்வி மேலாளர் எம்.எஸ். சஹுதுல் நஜீம் குறிப்பிட்டார்.
கல்முனை மாநகரில் உள்ள நூற்று நாற்பத்து இரண்டு வருட கால கல்வி வரலாற்றைக் கொண்ட கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி இப் பாடசாலை முதல்வர் செல்லத்தம்பி கலையரசன் தலைமையில் 05.03.2025 புதன்கிழமை இடம்பெற்றது.
இந் நிகழ்வில் கல்முனை வலயக் கல்வி மேலாளர் எம். எஸ். சஹுதுல் நஜீம் பிரதம அதிதியாக கலந்து கொண்டு அங்கு மேலும் பேசுகையில்.
உலகப் புகழ் பெற்ற கல்விமான்களையும் மற்றும் தேசிய ரீதியில் பூகழோச்சிய அரசியல் தலைவர்களையும் சமயத் தலைவர்களையும் துறைசார் நிபுணர்களையும் சமூகப் பொருத்தப்பாடு மிக்க பிரஜைகளையும் உற்பத்தி செய்த கல்விக் கூடம் கல்முனை உவெஸ்லியாகும்.
இப் பாடசாலையில் கல்வி கற்ற மாணவணாகிய நானும் எமது வலயக் கல்வி அலுவலக கணக்காளருமான கே.லிங்கேஸ்வரனும் அதிதிகளாக கலந்து கொண்டுள்ளமை இறைவன் அளித்த பெரும் பேறாகும்.
இன்று கல்முனை கல்வி வலயம் ஓ.எல். பரீட்சை பெறுபேறுகளுக்கமைய முன்னிலை வகிப்பதைப் போல் விளையாட்டுத் துறையிலும் சாதனை படைக்க இந்த நிகழ்வு அடித்தளமிடவேண்டும் என்றார்.
இந்த இல்ல விளையாட்டுப் போட்டியில் யோகம் இல்லம் 498 புள்ளிகளைப் பெற்று முதலிடம் பெற்றது இந் நிகழ்வில் அனுசரணையாளர்களரன தொழிலதிபர் க.பிரகலதள் வெஸ்ரர் ஏ.எம்.றியாஸ் சுரேஸ் ஆகியோர் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.














