அடிப்படைவாத கொள்கைகள் தொடர்பான செயற்பாடுகள் கல்முனையில் அதிகரிப்பு

பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர்

அடிப்படைவாத கொள்கைள் தொடர்பான செயற்பாடுகள் தொடர்பான தகவல்கள் கல்முனை உட்பட கிழக்கில் அதிகம் பதிவாகியுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாணத்திலுள்ள முஸ்லிம் மக்கள் மத்தியில் அடிப்படைவாத கொள்கைகளை பரப்புவதற்கான முயற்சிகள் தற்போது இடம்பெற்று வருகின்றமை தொடர்பில் அறிக்கைகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இராணுவ புலனாய்வு பிரிவு மற்றும் அரச புலனாய்வு பிரிவு ஆகியவற்றிடமிருந்தே இந்த அறிக்கைகள் கிடைக்கப் பெற்றுள்ளது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மதச் செயல்பாடுகள் நடக்கும் சில இடங்களைக் கண்காணித்ததில், குறிப்பாக சிறுவர்கள் மத்தியில் அடிப்படைவாத கொள்கைகள் புகுத்தப்படுவது கண்டறியப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த அடிப்படைவாத கொள்கைள் இஸ்லாத்தின் போதனைகளுக்கு முரணானது என அமைச்சர் ஆனந்த விஜயபால கூறினார்.

நாட்டில் தீவிரவாதம் மற்றும் இனவாதம் மீண்டும் பரவ ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம். இது போன்ற பிரச்னைகளை முளையிலேயே அகற்ற நடவடிக்கை எடுப்போம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.