இன்று மீராபாரதியின் பருத்தித்துறை- பொத்துவில் விழிப்பூட்டல் சைக்கிள் பயணம் நிறைவு!
தம்பட்டையில் அம்பாறை மாவட்ட கலைஞர்களுடன் அனுபவப் பகிர்வு!
( வி.ரி.சகாதேவராஜா)
மாற்றத்துக்கான முன்னோடி செயற்பாட்டாளர் மீராபாரதியின் விழிப்பூட்டல் சைக்கிள் பயணம் இன்று (25) செவ்வாய்க்கிழமையுடன் நிறைவுக்கு வருகிறது.
அவர், கடந்த 05 ஆம் திகதி பருத்தித்துறையில் இந்த விழிப்பூட்டல் சைக்கிள் பயணத்தை ஆரம்பித்தார். இன்று 25 ஆம் திகதி பொத்துவிலில் இப்பயணத்தை நிறைவு செய்ய திட்டமிட்டுள்ளார்.
பருத்தித்துறை முதல் பொத்துவில் வரையான விழிப்பூட்டல் சைக்கிள் பயணத்தின் போது சமூக மாற்றத்துக்கான முன்னோடி செயற்பாட்டாளர் வ. க. செ. மீராபாரதி நேற்று முன்தினம் அக்கரைப்பற்று தம்பட்டையில் அம்பாறை மாவட்ட கலைஞர்களைச் சந்தித்தார்.
அங்கு வந்தடைந்த அவருக்கு கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் சரவணமுத்து நவநீதன் குழுவினரால் மகத்தான வரவேற்பு வழங்கப்பட்டது.
மாகாண சிரேஸ்ட கலாசார உத்தியோகத்தர் வி.குணபால உள்ளிட்ட கலாசார உத்தியோகத்தர்கள், கலைஞர்கள் அவரை வரவேற்று கலந்துரையாடினர்.
அங்கு ,
பருத்தித்துறை முதல் பொத்துவில் வரையான அவருடைய விழிப்பூட்டல் பயணத்தின் நோக்கங்களை மீராபாரதி கலைஞர்கள் மத்தியில் உரையாற்றினார்.
சைக்கிள் பாவனை ஊக்குவிக்கப்பட வேண்டும், சைக்கிள் பயணிகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும், பாதுகாப்பான மிதிவண்டி பாதைகளை அரசாங்கம் அமைத்து தர வேண்டும், சைக்கிள் பாவனை செலவு குறைந்தது, சிக்கனம் நிறைந்தது, ஆரோக்கியமான வாழ்வியலுக்கு பொருத்தமானது, அற்புதமான உடற்பயிற்சி ஆகும், பொருளாதார ரீதியாக நன்மை வாய்ந்தது மாத்திரம் அல்ல இயற்கை சுற்று சூழல் பாதுகாப்புக்கு உகந்தது, இச்சைக்கிள் விழ்ப்பூட்டல் பயணத்தின் மூலமாக வீட்டு தோட்ட செய்கை, பயன் தரும் பழ மரங்களின் நடுகை மற்றும் வளர்ப்பு, உள்ளூர் உற்பத்திகளுக்கான ஊக்குவிப்பு ஆகியவற்றை குறித்த விழிப்பூட்டல்களையும் மக்களுக்கு வழங்குகின்றோம் என்று அவர் தெரிவித்தார்.





