கலை இலக்கிய மன்றங்களை வலூட்டுவதன் மூலம் கிழக்கு கலையை விருத்தி செய்யலாம்! 120 மில்லியன் ஒதுக்கீடு என்கிறார் மாகாண பணிப்பாளர் நவநீதன்.
( வி.ரி. சகாதேவராஜா)
கிழக்கில் கலை இலக்கிய மன்றங்களை வலு ஊட்டுவதன் மூலம் கலையை விருத்தி செய்யலாம் .
இவ்வாறு கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் கலாசார திணைக்கள பணிப்பாளர் சரவணமுத்து நவநீதன் தெரிவித்தார் .
அம்பாறை மாவட்ட கலைஞர்கள் ஒன்று கூடல் அக்கரைப்பற்று தம்பட்டை சுவாட் பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்
இவ்வருடம் கிழக்கு மாகாண கலை பண்பாட்டு கலாசார நடவடிக்கைக்காக 120 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது .
இவற்றில் ஆலயங்களுக்கு வணக்கஸ் தலங்களுக்கு நிதி ஒதுக்க முடியாதவாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கின்றது.
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம், கலை இலக்கியவாதிகளின் துறைசார் அறிவு, அனுபவங்களை பகிர்தல் மற்றும் விருத்தி செய்தல் எனும் நோக்கில் நேற்று முன்தினம் (22) சனிக்கிழமை அம்பாறை மாவட்ட கலை இலக்கிய செயற்பாட்டாளர்களுக்காக நடத்திய வாய்மை விருத்தி ஒன்று கூடுகைச் செயலமர்வு சிறப்பாக நடைபெற்றது .
அவர் மேலும் அங்கு தெரிவிக்கையில்..
கிழக்கு மாகாணத்தில் வருடம் ஒன்றுக்கு 250 –
350 வரையிலான நூல்கள் வெளியிடப்படுகின்றன .
ஒப்பீட்டளவில் அவற்றில் அம்பாறை மாவட்ட கலைஞர்களின் நூல்களே அதிகம். இதனால் இவ் வருடம் ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் 40 வீதமான நிதியை அம்பாறை மாவட்டத்திற்கு கொடுக்க வேண்டும். மீதி 60% தான் மட்டக்களப்பு திருகோணமலை மாவட்டங்களுக்குகொடுக்க வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கின்றது.
இதேவேளை பெரிய நீலாவணையில் எமக்கென்று கலாச்சார மண்டபம் ஒன்று 75 லட்ச ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்டு இருக்கின்றது.
இனிமேல் அந்த கட்டிடத்தில் எமது கலைஇலக்கிய நிர்வாக பயிற்சி ஒன்றுகூடல் பயிற்சி பட்டறை போன்றன இடம்பெறும். என்றார்
நிகழ்வில் ஆலையடிவேம்பு உதவி பிரதேச செயலாளர் ஆர்.சுதாகர், லாகுகலை உதவி பிரதேச செயலாளர் க.சதிசேகரன், அக்கரைப்பற்று உதவி பிரதேச செயலாளர் வை.றஷீட், அட்டாளைச்சேனை உதவி பிரதேச செயலாளர் திருமதி முஸாபிர் ஆகியோர் கலந்து சிறப்பித்தார்கள்.
மேலும் தமிழ் மணி உமா வரதராஜன் உள்ளிட்ட வளவாளர்களும் கலந்து கொண்டனர்.
மாகாண சிரேஸ்ட கலாசார உத்தியோகத்தர் வி.குணபால, மாவட்ட கலாசார உத்தியோகத்தர் ஏல்.தௌபீக் மற்றும் கலாச்சார உத்தியோகத்தர்கள் கலந்து சிறப்பித்தார்கள்.








