மிகவும் ஆபத்தான நிலையில் சீரழியும் பிரபல பெண்கள் பாடசாலை கட்டடம் !

இடிந்து விழுந்தால் நூற்றுக்கணக்கான மாணவிகளை பலி எடுக்கும் அபாயம்!

( வி.ரி.சகாதேவராஜா)

பாரிய அனர்த்தத்தை எதிர்கொண்டுள்ள 

மிகவும் ஆபத்தான நிலையில் சீரழிந்து கொண்டிருக்கும் மூன்று மாடிக்கட்டிடம் ஒன்று  காரைதீவு பொது மக்கள் மத்தியில் பாரிய அச்சத்தை தோற்றுவித்துள்ளது.

கல்முனை வலயத்திலுள்ள காரைதீவு இ.கி.சங்க பெண்கள் பாடசாலையிலேயே இவ் அபாயகரமான அனர்த்த நிலையுள்ள கட்டடம் காணப்படுகிறது.

இக் கட்டிடத்தை நேற்று வியாழக்கிழமை காரைதீவு பிரதேச செயலாளர் பொறியியலாளர் ஜி.அருணன் ஊடகவியலாளருடன் நேரில் சென்று பார்வையிட்டார்.

90 × 25 நீள அகலமுள்ள இந்த மூன்று மாடி கட்டிடத்தில் முதலிரு தளங்களில் 08 வகுப்புகள் இருந்தன.

சுமார் 240 மாணவிகள் கல்வி கற்று வந்தனர்.

கீழ்த் தளத்தில் அதிபர் அலுவலகம் உள்ளிட்ட நிருவாக அலகு இயங்கி வந்தது.

 கடந்த ஜனவரி மாதம் இந்த கட்டடத்தின் தூண்கள் தூர்ந்து தளங்கள் மோசமாகவும் தென்பட்டது.

 அதைத் தொடர்ந்து அதிபர் எஸ்.ரகுநாதன் உரிய அதிகாரிகளிடம் முறையிட்டார்.

மேலும் அந்த வகுப்புகளில் கற்ற மாணவிகளை  உடனடியாக ஒன்று கூடல் மண்டபத்திலும் ஏனைய இடங்களிலும் மாற்றி வைத்திருக்கின்றார். 

இந்த வேளையில் இந்த ஆபத்தான கட்டிடம் இடிந்து விழுமானால் நூற்றுக்கணக்கான மாணவிகளை பலி கொள்ள ஏதுவாக இருக்கும் என்ற  விடயம் பரவலாக ஊருக்குள் கசிந்தது.

அதன்படி காரைதீவு பிரதேச செயலாளர், கல்முனை வலய கல்வி பணிப்பாளர் ,கல்முனை கட்டிடங்கள் திணைக்கள பிரதம பிரதம பொறியியலாளர் ஆகியோர் எழுத்து மூலம் இக் கட்டிடத்தை பாவிக்க வேண்டாம். மாணவிகளை வேறிடத்தில் வைக்குமாறும் அறிவுறுத்தல்களை வழங்கினர்.

இதுதவிர,கட்டடங்கள் திணைக்கள பிரதம பொறியியலாளர் கே.அச்சுதன் உள்ளிட்ட குழுவினரும் நேரடியாக வந்து பார்வையிட்டு நிலைமையை அறிவித்துள்ளனர்.

அண்மையில் நடைபெற்ற பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்திலும் இது விடயம் பிரஸ்தாபிக்கப்பட்டது.

இது விடயம் தொடர்பாக கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் திருமதி எஸ் .ஆர் .ஹசந்தி கிழக்கு மாகாண பிரதம செயலாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார். இதற்கென்று ஒரு குழுவை நியமித்து உடனடியாக இதற்குரிய தீர்வை காணுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கின்றார்கள் .

இது எப்படி இருந்த பொழுதிலும் இதுவரைக்கும் அந்த ஆபத்தான கட்டிடம் இருந்து கொண்டே இருக்கின்றது . எந்தவொரு விரைவான நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொது மக்கள் குறை கூறுகின்றனர்.

அனர்த்தங்கள் நிகழ்ந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பதில் சொல்ல வேண்டும் எனவும் அவர்கள் கேட்டுள்ளனர்.

650 க்கும் மேற்பட்ட மாணவிகள் அந்த கட்டிடத்தை தாண்டியே பயணிக்கிறார்கள். இது எப்பொழுது விழும் என்று தெரியாமல் பெற்றோர்கள் மிகுந்த அச்சத்தோடு காணப்படுகிறார்கள்.

 சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக நடவடிக்கை வழங்க வேண்டும் என்று காரைதீவு மக்கள் கேட்டுக் கொள்கின்றார்கள் .

முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளார் 1926 இல்  ஆரம்பிக்கப்பட்ட இந்த பாடசாலையில் 1991 ஆம் ஆண்டு இந்த விவேகானந்தர் மண்டபம் கட்டி எழுப்பப்பட்டு திறக்கப்பட்டது .

இன்று அது மிகவும் ஆபத்தான நிலையில் கம்பிகள் கடல் பிடித்த நிலையில் தூண்கள் உடைந்து உள்ள நிலையில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.