சேனைக்குடியிருப்பு ஆரம்ப மருத்துவ பராமரிப்பு பிரிவினை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை

நூருல் ஹுதா உமர்

கல்முனை, சேனைக்குடியிருப்பு ஆரம்ப மருத்துவ பராமரிப்பு பிரிவின் சேவையினை மேம்படுத்தி அப்பகுதி மக்களுக்கு வினைத்திறன் மிக்க சுகாதார சேவையை வழங்கும் பொருட்டு, குறித்த மருத்துவ பராமரிப்பு பிரிவின் அபிவிருத்தி தொடர்பான கூட்டமொன்று இடம்பெற்றது

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸதீன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பிராந்திய கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் எம்.சீ.எம்.மாஹிர், சேனைக்குடியிருப்பு ஆரம்ப மருத்துவ பராமரிப்பு பிரிவின் பொறுப்பதிகாரி டொக்டர் எம்.பி.எம்.ஷில்மி, டாக்டர் திருமதி புஷ்பலதா லோகநாதன், ஓய்வு பெற்ற ஆசிரியர் அப்துல் கபூர் உள்ளிட்டவர்களுடன் சேனைக்குடியிருப்பு மற்றும் நற்பிட்டிமுனை பிரதேச முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

அரச திணைக்களங்களின் ஒத்துழைப்புடன் வைத்தியசாலைக்குத் தேவையான மேலதிக காணியினை பெற்று இடத்தினை விஸ்தரித்தல், வள பற்றாக்குறையை நிவர்த்தி செய்தல், புதிதாக கட்டடங்களை நிர்மாணித்தல் என பல முக்கிய விடயங்கள் குறித்து இதன் போது கவனம் செலுத்தப்பட்டது.

இதேவேளை மருத்துவ தளபாடங்கள், அலுவலக பாவனைக்கு தேவையான இலத்திரனியல் உபகரணங்கள் என்பனவும் பிராந்திய பணிப்பாளரினால் இந்நிகழ்வில் வழங்கி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.