செல்லையா-பேரின்பராசா 

தமிழர் ஒருவர் கிழக்கு மாகாணசபைக்கு முதலமைச்சராக வரவேண்டும் இதற்கு  தமிழ் அமைப்புக்கள் ஒரணியில் திரண்டு ஒரு சின்னத்தில் போட்டியிட்டால்  மட்டுமே பதினைந்து (15) ஆசனங்களைப் பெற முடியும் இதுவே கிழக்கு மாகாண தமிழ் மக்களின் விருப்பமாகும் என்று முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெத்தினம் குறிப்பிட்டார்.

மட்டக்களப்பில் இடம்பெற்ற. ஊடக சந்திப்பின் போது இவ் விடயம் தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்.

1987ம்ஆண்டு இலங்கை, இந்திய ஒப்பந்தம் உருவாக்கப் பட்டு இலங்கையிலுள்ள ஒன்பது மாகாணங்களிலும் முப்பது வருடங்களாக மாகாணசபை நிருவாகம் அமுல்படுத்தப்பட்டு வருகின்றது.

1988ம் ஆண்டு வடக்கு கிழக்கு மாகாணம் இணைக்கப்பட்டு நவம்பர் மாதம் தேர்தல் நடாத்தப்பட்டு பின்பு 30.06.2006ம் ஆண்டு வடக்குகிழக்கை நீதிமன்ற தீர்ப்பு ஊடாக பிரித்து கிழக்கு மாகாணசபை செயற்படத் தொடங்கியது. 

இச் சபைக்கு இருபது வருடங்களுக்கு மேலாக தேர்தல் நடாத்தப்படாமல் 2008ம் ஆண்டு, 2012ம் ஆண்டும் தேர்தல் நடாத்தப்பட்டு 37 உறுப்பினர்கள் இம் மாகாணசபைக்கு மக்கள் பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்பட்டனர்.

இம் மாகாணசபை ஐந்து அமைச்சுக்களாக பிரிக்கப்பட்டு அதிகாரப் பங்கீடு கருதி நான்கு நியதிச் சட்டங்கள் உருவாக்கப்பட்டன. குறிப்பாக, 2009ம்ஆண்டு கிழக்கு மாகாண வீதிப்பணியக போக்குவரத்து அதிகாரசபை  2010ம் ஆண்டு கிழக்கு மாகாண முன்பள்ளி பாலர் பாடசாலை பணியகம்,2013ம்ஆண்டு கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகாரசபை, 2015ம் ஆண்டு கிழக்கு மாகாண சுற்றுலாத்துறை பணியகம் போன்றவற்றுக்கு நியதிச் சட்டம் உருவாக்கப்பட்டு இன்னும் சில நியதிச் சட்டங்களுக்கான அனுமதி மறுக்கப்பட்ட நிலையில்  உள்ளது.

கிழக்கு மாகாணத்தின் வீதாசாரத்தின் அடிப்படையில் தமிழர்கள் -40வீதம், முஸ்லிம்கள் -36வீதம், சிங்களவர்கள்- 24வீதம் என்ற வீதத்தின் அடிப்படையில் மொத்தமாக 37 மக்கள் பிரதிநிதிகள். இதில் தமிழர்களின் வீதாசார அடிப்படையில் 15 ஆசனங்களை தமிழர்கள் பெற முடியும். 

எந்தக்கட்சி கூட ஆசனங்களை பெறுகின்றதோ அக் கட்சியினரை ஆட்சி அமைப்பதற்கு தேர்தல் அலுவலகம் கோரும். இதன் அடிப்படையில் தமிழர்கள் 15ஆசனங்களை ஒரு சின்னத்தின் கீழ் பெறப்பட்டால் ஆட்சி அமைப்பதற்கு 19ஆசனங்கள் தேவை. இவ் வேளையில் பொது இணக்கப் பாட்டுடன் ஏனைய கட்சிகளுடன் கூட்டுச் சேர வேண்டி வரும் அப்படி கூட்டுச் சேரும் பட்சத்தில் தமிழ் முதலமைச்சரையும், இன்னும் சில  அமைச்சுக்களையும் 15ஆசனங்களைப் பெற்ற தனித்துவமான கட்சி  கோர முடியும்.

இவைமட்டுமின்றி  அதிகார பரவலாக்கலை அமுலாக்குவதற்கு  புதிய நியதிச் சட்டங்களை உருவாக்கும் பட்சத்தில் பல அதிகாரங்களை எம்மால் அமுல்படுத்த முடியும். 75ற்கு மேற்பட்ட நியதிச்சட்டங்களை உருவாக்கிய மாகாணசபை இலங்கையில் உண்டு. எனவே மாகாணசபை

முறமையை அமுல்படுத்தக் கூடியவர்களை மக்கள் பிரதிநிதிகளாக தெரிவு செய்வதற்கு அனைவரையும் அணிதிரளுமாறு கோருகின்றேன் என்று குறிப்பிட்டார்.