காரைதீவில் உலக இகிமிசன் துணைத் தலைவர் சுவாமி சுஹிதானந்தஜிக்கு மகத்தான வரவேற்பு!
10 துறவிகளுக்கும் பூரண கும்பங்களுடன் பெருவரவேற்பு!!
( வி.ரி. சகாதேவராஜா)
உலகளாவிய இராமகிருஷ்ண மடம் மற்றும் மிஷனின் துணைத் தலைவர் அதிவண. ஸ்ரீமத் சுவாமி சுஹிதானந்தஜி மஹராஜ்ஜிற்கு காரைதீவில் திங்கட்கிழமை மாலை மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இராமகிருஷ்ண மிஷனுக்கு இரு பெரும் துறவிகளை ( சுவாமி விபுலானந்த அடிகள் மற்றும் சுவாமி நடராஜானந்த ஜீ) அளித்த காரைதீவு மண்ணிற்கு வருகை தந்த இராமகிருஷ்ண மிஷனின் இலங்கைத் தலைவர் சுவாமி அக்ஷராத்மானந்த ஜீ மகராஜ் ,முன்னாள் தலைவரும் காசி ராமகிருஷ்ண மடத்தின் தலைவருமான சுவாமி சர்வரூபானந்த ஜி மகராஜ் , மதுரை ராமகிருஷ்ண மிஷன் தலைவர் சுவாமி நித்யதீபானந்த ஜீ மகராஜ், மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷன் பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தா ஜீ மகராஜ் உள்ளிட்ட பத்து மிசன் துறவிகள் முதலில் கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு விஜயம் செய்தனர்.
அங்கு விசேட பூசையின் பின்னர் இலங்கை மண்ணின் முதல் இராமகிருஷ்ணமிஷன் துறவி முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் பிறந்த இல்லத்திற்கு விஜயம் செய்து பூசை வழிபாடுகளில் ஈடுபட்டு அங்குள்ள அரும்பொருட் காட்சியகத்தையும் மணிமண்டபத்தையும் பார்வையிட்டனர்.
பின்னர் சுவாமி விபுலானந்தர் ஞாபகார்த்த பணிமன்றத்திலிருந்து ஊர்வலமாக கொம்புச் சந்தி வரை பாரம்பரிய கலை கலாசார பூரண கும்பங்களுடன் ஊர்வலமாக பத்து துறவிகளும் ஆன்மீக உணர்வுடன் கோலாகலமாக அழைத்துவரப்பட்டனர்.
அதைத் தொடர்ந்து கொம்புச் சந்திக்கு அருகாமையில் உள்ள இராமகிருஷ்ண மிஷன் வளாகத்தில் அமைந்துள்ள “சாரதா பவன்” எனும் பெண் துறவிகளுக்கான தங்குமிடத்தினை சுவாமி நீலமாதவானந்தா ஜீ மகராஜ் முன்னிலையில் உலக தலைவர் சுஹிதானந்தஜீ மகராஜ் திறந்து வைத்தார்.
பின்னர் சாரதா நலன்புரி நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு பகவான் ஸ்ரீ ராமகிருஸ்ணர் திருக்கோவிலில் பூசை வழிபாடுகள் இடம்பெற்றன.
அங்கு மாணவர்களுக்கான கணினி வள நிலையம் சுவாமியால் திறந்து வைக்கப்பட்டது.
அதன் பின்னர் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ பொதுக்கூட்டம் நடைபெற்றது.
மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷன் பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தா ஜீ மகராஜ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் உலக துணைத் தலைவர் ஆங்கிலத்தில் அருளுரையாற்றினார்.
பின்னர் அங்கு பக்தர்களுக்கு ஆசி வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.
திருக்கோவில் தொடக்கம் மட்டக்களப்பு வரையுள்ள இராமகிருஷ்ண மிஷன் பக்தர்கள் அபிமானி























