பெரியநீலாவணையில் உள்ள இரண்டு மதுபானசாலைகளும் அகற்றப்பட வேண்டும்! .
அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கம் கோரிக்கை.
செல்லையா-பேரின்பராசா
அம்பாறை மாவட்டத்தின் வடக்கு எல்லையில் உள்ள பெரியநீலாவணையில் இயங்கிவரும் இரண்டு மதுபானசாலைகளையும் “கிளீன் ஸ்ரீலங்கா ” வேலைத் திட்டத்தின் கீழ் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தனக்குள்ள நிறைவேற்று அதிகாரத்தினைப் பயன்படுத்தி உடன் அகற்ற வேண்டுமென்று அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கம் உருக்கமான கோரிக்கையினை முன்வைத்துள்ளது.
இவ் விவகாரம் தொடர்பில் அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் எஸ்.லோகநாதன் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது.
இந் நாட்டில் இடம்பெற்ற கொடிய யுத்தம் காரணமாகவும் சுனாமி பேரழிவு காரணமாகவும் கிழக்கு மாகாணத்தில் அதிகளவான உயிர் இழப்புக்களையும் சொத்திழப்புக்களையும் சந்தித்த கிராமமாக பெரியநீலாவணை கிராமம் உள்ளமை கண்கூடு.
குறித்த மதுபானசாலைகள் இரண்டும் இந்து ஆலயம் கிறிஸ்தவ தேவாலயம் சரஸ்வதி வித்தியாலயம் பெரியநீலாவணை வைத்தியசாலை என்பவற்றுக்கு அருகில் உள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
இவ்வாறான சூழலில் மனக்காயங்களுடன் வாழும் மக்களிடையே பொருளாதார வளங்களை சூறையாடும் மூட்டைப் பூச்சியாக இந்த மதுபானசாலைகள் உள்ளன. இதன் காரணமாக குடும்ப வன்முறைகள் பெண்களுக்கெதிரான வன்முறைகள் தற்கொலைகள் கலாசார சீர்கேடுகள் சமூகப் பிணக்குகள் வீதி விபத்துக்கள் என விரும்பத்தகாத விடயங்கள் நாளுக்கு நாள் அரங்கேறி இம் மக்களின் வாழ்வியலை குட்டிச்சுவராக்கியுள்ளது.
இத்தகைய விரும்பத்தகாத செயற்பாடானது பெரியநீலாவணைக் கிராமத்தில் மட்டுமன்றி இக் கிராமத்தின் அருகில் உள்ள துறைநீலாவணை பெரியகல்லாறு கோட்டைக்கல்லாறு பாண்டிருப்பு துரைவந்தியமேடு சேனைக்குடியிருப்பு நற்பிட்டிமுனை மணல்சேனை போன்ற ஊர்களிலும் நன்கு ஊடுருவியுள்ளமை கவலைக்குரிய விடயங்களாகும்.
மேற் கூறிய கிராமங்களில் உள்ள பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்கள் இந்த மதுபான சாலைகள் இயக்கமுறுவதால் சிறுவர் துஷ்பிரயோகங்களுக்கும் குடும்ப வன்முறைகளுக்கும் ஆளாகி வருகின்றனர் இன்னும் சில மாணவர்கள் பாடசாலைகளில் இருந்து இடைவிலகும் துன்பியல் சம்பவங்களுக்கும் ஆளாகியுள்ளனர்..
இதே வேளை இந்த விடயத்தை தமக்கு சாதகமாக்கி ஒருசில அரசியல்வாதிகள் தமது நாடகங்களை அரங்கேற்றி அரசியல் வியாபாரமும் விபச்சாரமும் செய்ய முனைவதையும் அனுமதிக்க முடியாது.
எனவே வறுமைக் கோட்டின் கீழ் வாழும் அதிகளவான மக்கள் தொகையைக் கொண்ட பெரியநீலாவணைக் கிராம மக்கள் மட்டுமன்றி அயல் கிராம மக்களும் நிம்மதி பெருமூச்சு விட்டு உளக் காயங்கள் இன்றி வாழும் சூழலை உருவாக்கும் பொறுப்பையும் கடமையினையும் உணர்ந்து ஜனாதிபதி பொது மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து பெரியநீலாவணையில் உள்ள இரண்டு மதுபானசாலைகளையும் அகற்றி எமது மக்களைப் பாதுகாக்க முன்வர வேண்டுமென்று உருக்கமான கோரிக்கையினை தொழிற்சங்கவாதியான எஸ்.லோகநாதன் முன்வைத்துள்ளார்.