பெரிய நீலாவணையில் மதுபானசாலைக்கு எதிரான போராட்டம் வலுக்கிறது!
இன்று பிரதேச செயலாளர் மற்றும் சுமந்திரன் விரைவு
( வி.ரி. சகாதேவராஜா)
இரண்டு தடவைகள் பொதுமக்கள் நடாத்திய எதிர்ப்பு போராட்டங்களையும் மீறி மீண்டும் பெரிய நீலாவணையில் மதுபான சாலை கடந்த (11) செவ்வாய்க்கிழமை திறந்து வைக்கப்பட்டதையடுத்து தொடர் போராட்டம் நாளுக்கு நாள் வலுப்பெற்று வருகிறது.
பொது மக்கள் மூன்றாவது முறையாகவும் ஆர்ப்பாட்டத்தை கொளுத்தும் வெயிலில் இன்று (16) ஞாயிற்றுக்கிழமையும் முன்னெடுத்துள்ளனர்.
இன்று ,ஞாயிற்றுக்கிழமை சவப்பெட்டி சகிதம் ஏராளமான பொதுமக்கள் குறித்த மதுபானசாலை முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெரிய நீலாவணையில் உள்ள இரண்டு மதுபான சாலைகளையும் மூட வேண்டும் என்ற கோரிக்கையும் மக்களால் எழுப்பப்பட்டது.
சுமந்திரன் வருகை!
அச் சமயம், இலங்கை தமிழ் அரசுக் கட்சி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் வருகை தந்தார். அவருடன் பாராளுமன்ற உறுப்பினர்களான இ.சாணக்கியன் க.கோடீஸ்வரன் ஆகியோரும் வந்தனர்.
மக்கள் ஆக்ரோசமாக கேள்விகளை தொடுத்தனர். இங்கு அரசியல் செய்ய வேண்டாம். மதுபான சாலை அனுமதி பெற்றவர்கள் வேண்டாம் என்றெல்லாம் கோஷம் எழுப்பினர்.
இறுதியில் ” மகஜரைத் தாருங்கள்.
பெரியநீலாவணையில் திறக்கப்பட்டுள்ள மதுபானசாலைக்கு எதிராக நீதிமன்றின் ஊடாக தடையுத்தரவு பெற்று நடவடிக்கையெடுக்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் உறுதியளித்தார்.
பிரதேச செயலாளர் அதிசயராஜ் விஜயம்
இதேவேளை, இன்று கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரி.ஜே.அதிசயராஜ் அங்கு விஜயம் செய்தார்.
அவரிடமும் மக்கள் கேள்வி எழுப்பினர்.
அவர் பதில் அளிக்கையில்..
இதுவரை மக்கள் தந்த அனைத்து கடிதங்களும் கோரிக்கைகளும் உரிய இடங்களுக்கு அனுப்பி இருக்கின்றோம். நாங்கள் இந்த மதுபான சாலை தொடர்பாக எந்த சிபார்சையும் செய்யவில்லை.
விரும்பினால் நீங்கள் அலுவலகம் வந்து அந்த ஆவணங்களை பார்க்கலாம் .
அரசின் கொள்கையாக இந்த புதிய மதுபானசாலைகள் திறக்கப்படுகின்றன. இது அனைவருக்கும் தெரியும் .
எனினும் மக்கள் சார்பாக விடயங்களை நாங்கள் கவனிப்போம். மக்களுக்கு விருப்பம் இல்லாத விடயங்களை நாங்கள் ஒருபோதும் முன்னெடுக்க மாட்டோம். அதில் ஒரு கட்டமாக தான் நாம் இதனை தற்காலிகமாக மூடி இருந்தோம் .
இருந்தும் சட்டரீதியாக நடவடிக்கைகள் உட்பட்டு அது மீண்டும் கடந்த 11 ஆம் தேதி திறக்கப்பட்டது. நான் இந்த தவறனையை உடனடியாக மூடுவேன் என்று உறுதி அளிக்க முடியாது .ஏனென்றால் இது எனது கட்டுப்பாட்டில் இல்லை. மக்கள் கோரிக்கையை நிறைவேற்ற நாங்கள் தொடர்ந்து மக்களோடு பயணிப்போம் .
இந்த மதுபானசாலைக்கான அனுமதி பத்திரம் வலுவில் உள்ளது. அவர்கள் தொடர்ந்து பணம் கட்டியிருக்கின்றார்கள். அது தொடர்ந்து வலுவில் உள்ளது ளதாகத்தான் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். என்றார்.
https://www.facebook.com/share/v/15jzMdKdDw
வரலாறு.
பெரியநீலாவணையில் ஏலவே காலா காலமாக ஒரு மதுபான சாலை இயங்கி வருகிறது.
அதேவேளை கடந்த வருடம் புதிய மதுபானசாலை ஒன்று திறந்து வைக்கப்பட்டது. அதனை பொதுமக்களும், பொது அமைப்புகளும் ஆலய பரிபாலன சபையினரும், பல்வேறு பட்ட எதிர்ப்புகளை தெரிவித்து கல்முனை வடக்கு பிரதேச செயலாளருக்கு மகஜர் கையளித்ததன் மூலம் தற்காலிகமாக அது மூடப்பட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து மீண்டும் இந்த வருடம் மதுபான சாலையை திறப்பதற்குரிய நடவடிக்கையை உரிமையாளர் மேற்கொண்ட போதும், மீண்டும் பொதுமக்கள்
கல்முனை வடக்கு பிரதேச செயலத்துக்கு முன்பாக ஒன்று கூடி விளக்குமாற்றுடன் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொண்டு இருந்தனர். அத்தோடு மதுவரி திணைக்கள அதிகாரிகளிடம் பொது அமைப்புகளும் ஆலய பரிபாலன சபையினரும் பெரியநீலாவணையில் ஏற்கனவே மதுபான சாலை ஒன்று இருப்பதாகவும், மற்றும் ஒரு மதுபான சாலை அவசியம் இல்லை என்பதையும், கூறி எமது கிராமத்து மக்களுக்கு இது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதனை தெரிவித்து மகஜர் ஒன்றினை கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ஊடாக கையளித்திருந்தனர்.
அதன் பின்னர் மதுவரி திணைக்கள அதிகாரிகள் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு வருகை தந்து மகஜர் கையளித்த பொது அமைப்புகளையும் ஆலய பரிபாலன சபையினரையும் சந்தித்து விசாரணைகளையும் மேற்கொண்டு இருந்தனர்.
இவ்வாறு பொதுமக்கள் எதிர்ப்புகள் தெரிவித்த போதும் கடந்த (11) காலை தொடக்கம் மதுபான சாலை மீண்டும் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
அதனை எதிர்த்து மக்கள் தொடர்ந்து கொட்டும் மழையிலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.











