மணிநேர பொலிஸ் பாதுகாப்புடன் இயங்கும் பெரியநீலாவணை மதுபான சாலை? காற்றில் பறந்த வாக்குறுதிகள்? மக்கள் தொடர் எதிர்ப்பு

பெரியநீலாவணையில் புதிதாகத் திறந்த மதுபான சாலை ஒன்று 24 மணி நேர போலீஸ் பாதுகாப்புடன் இயங்கி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடந்த ஆட்சி காலத்தில் முறைகேடான முறையில் பல மதுபான சாலை உரிமங்கள் வழங்கப்பட்டிருந்தன. அவ்வாறு வழங்கப்பட்ட FL 04 வகையைச் சேர்ந்த மதுபான சாலை ஒன்று பெரியநீலாவணை பிரதான வீதியில் மக்களின் எதிர்ப்பின் காரணமாக தொடர்ச்சியாக 24 மணி நேர பொலிஸ் பாதுகாப்புடன் இயங்கி வருகின்றது.

கடந்த வருடம் அனுர குமார திசாநாயக்க ஜனாதிபதியாக பதவியேற்ற தினத்தன்று திறக்கப்பட்ட மேற்படி மதுபான சாலை மக்கள் எதிர்ப்பின் காரணமாக 2025.02.10 ம் திகதி வரை தற்காலிகமாக மூடப்பட்டிருந்தது.

இருந்த போதும் கிழக்கு மாகாண உதவி மது வரி ஆணையாளர் உடைய தன்னிச்சையான செயற்பாடு காரணமாக 2025 ஆம் ஆண்டிற்கான புதிய அனுமதி பத்திரம் புதுப்பிப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இதனை எதிர்த்து பொதுமக்கள் மற்றும் சிவில் அமைப்புகளால் தொடர்ச்சியாக எதிர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதனால் அந்த பிரதேசம் தொடர்ந்தும் பதட்டமான நிலையில் காணப்பட்டு வருகின்றது.

நிலமையை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் பொருட்டு பெரியநீலாவணை பொலிஸாரால் சில சிவில் செயற்பாட்டாளர்களுக்கு எதிராக நீதிமன்ற தடை உத்தரவுகள் பெறப்பட்டுள்ளதுடன் தொடர்ச்சியாக அம்பாறை, சம்மாந்துறை, சவளக்கடை, கல்முனை மற்றும் பெரியநீலாவணை பொலிஸாரென அதிகளவான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

இந்த ஆட்சிக் காலத்தில் 24 மணி நேர பொலிஸ் பாதுகாப்புடன் மதுபானச் சாலைகள் இயங்குவது மக்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.