மக்கள் எதிர்ப்பையும் மீறி மீண்டும் பெரிய நீலாவணையில் மதுபான சாலை திறந்து வைக்கப்பட்டது!
-பிரபா –
பெரியநீலாவணையில் கடந்த வருடம் புதிய மதுபானசாலை ஒன்று திறந்து வைக்கப்பட்டது. அதனை பொதுமக்களும், பொது அமைப்புகளும் ஆலய பரிபாலன சபையினரும், பல்வேறு பட்ட எதிர்ப்புகளை தெரிவித்து கல்முனை வடக்கு பிரதேச செயலாளருக்கு மகஜர் கையளித்ததன் மூலம் தற்காலிகமாக அது மூடப்பட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து மீண்டும் இந்த வருடம் மதுபான சாலையை திறப்பதற்குரிய நடவடிக்கையை உரிமையாளர் மேற்கொண்ட போதும், மீண்டும் பொதுமக்கள்
கல்முனை வடக்கு பிரதேச செயலத்துக்கு முன்பாக ஒன்று கூடி பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொண்டு இருந்தனர். அத்தோடு மதுவரி திணைக்கள அதிகாரிகளிடம் பொது அமைப்புகளும் ஆலய பரிபாலன சபையினரும் பெரியநீலாவணையில் ஏற்கனவே மதுபான சாலை ஒன்று இருப்பதாகவும், மற்றும் ஒரு மதுபான சாலை அவசியம் இல்லை என்பதையும், கூறி எமது கிராமத்து மக்களுக்கு இது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதனை தெரிவித்து மகஜர் ஒன்றினை கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ஊடாக கையளித்திருந்தனர்.
அதன் பின்னர் மதுவரி திணைக்கள அதிகாரிகள் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு வருகை தந்து மகஜர் கையளித்த பொது அமைப்புகளையும் ஆலய பரிபாலன சபையினரையும் சந்தித்து விசாரணைகளையும் மேற்கொண்டு இருந்தனர். இவ்வாறு பொதுமக்கள் எதிர்ப்புகள் தெரிவித்த போதும் இன்றைய தினம்(11) இன்று காலை தொடக்கம் மதுபான சாலை மீண்டும் திறந்து வைக்கப்பட்டுள்ளது. அதனை எதிர்த்து மக்கள் தொடர்ந்து கொட்டும் மழையிலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்





