கல்முனை கல்வி வலய அதிபர்கள் சங்க முப்பெரும் கௌரவிப்பு நிகழ்வு !
நூருல் ஹுதா உமர்
கல்முனை கல்வி வலயம் இறுதியாக வெளியான சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் தேசிய ரீதியாக இரண்டாம் இடத்தை பெற்றதை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வும், கல்முனை வலயக்கல்வி பணிமனை கணக்காளராக இருந்து சமுர்த்தி திணைக்கள பிரதம கணக்காளராக பதவி உயர்வு பெற்று செல்லும் வை. ஹபீபுல்லாஹ் அவர்களின் சேவை நலன் பாராட்டு நிகழ்வும், கல்முனை வலயக்கல்வி பணிமனைக்கு புதிய கணக்காளராக நியமனம் பெற்று வருகை தந்திருக்கும் கே. லிங்கேஸ்வரன் அவர்களை வாழ்த்தி வரவேற்கும் நிகழ்வும் கல்முனை கல்வி வலய அதிபர்கள் சங்க ஏற்பாட்டில் சாய்ந்தமருது அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை வரவேற்பு மண்டபத்தில் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.
கல்முனை கல்வி வலய அதிபர்கள் சங்க செயலாளர் அதிபர் எம்.ஐ.எம். இல்யாஸ் அவர்களின் நெறிப்படுத்தலில் கல்முனை கல்வி வலய அதிபர்கள் சங்க தலைவர் எம். சுந்தர்ராஜன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வலய அதிபர்களின் கலை நிகழ்ச்சிகளும், வாழ்த்துரகளும் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கல்முனை வலயக்கல்வி பணிப்பாளர் எம்.எஸ். சஹதுல் நஜீம், வலயக் கல்வி அலுவலக பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான எம்.எச்.எம் ஜாபீர் (நிர்வாகம்), எம்.எச். றியாஸா (கல்வி அபிவிருத்தி), என். வரணியா (திட்டமிடல்), யூ.எல்.றியாழ் (முகாமைத்துவம்), அஸ்மா அப்துல் மலீக் (திட்டமிடல்), யூ.எல்.எம். ஸாஜித், ஏ.சன்ஜீவன், எம்.எல்.எம். முத்தரீஸ் ஆகியோர் 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த (சா.த) பரீட்சையில் தேசிய மட்டத்தில் 2 ஆம் இடத்தைப் பெறுவதற்கு பல்வேறு வழிகளில் அதிபர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் வழிகாட்டல்களை மேற்கொண்டமைக்காக பொன்னாடை போற்றி நினைவு சின்னங்கள், பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
அதனை தொடர்ந்து சமுர்த்தி திணைக்கள பிரதம கணக்காளராக பதவி உயர்வு பெற்று செல்லும் வை. ஹபீபுல்லாஹ் அவர்களையும் கல்முனை வலயக்கல்வி பணிமனைக்கு புதிய கணக்காளராக நியமிக்கப்பட்டிருக்கும் கே. லிங்கேஸ்வரன் அவர்களையும் அதிபர் சங்கத்தினால் பொன்னாடை போற்றி நினைவு சின்னங்கள், பரிசுகள் வழங்கி கௌரவம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் கல்முனை கல்வி வலய அதிபர் சங்க பொருளாளர் ஐ.எல்.எம். ஜின்னாஹ், அதிபர்கள் சங்க முன்னாள் தலைவர், முன்னாள் செயலாளர், முன்னாள் பொருளாளர் உட்பட நிர்வாகிகள், அதிபர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.



















