வி.சுகிர்தகுமார்
கிழக்கு மாகாண கலாசார பண்பட்டாலுவல்கள் திணைக்களமும் ஆலையடிவேம்பு பிரதேச செயலகமும் இணைந்து கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எஸ்.நவநீதன்; தலைமையில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் ஒருங்கிணைப்பில் இவ்வருடம் மாகாண பொங்கல் விழா ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் பனங்காடு பாசுபதேசுவரர் ஆலயத்தில் இடம்பெற்றது.
அம்பாரை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் பனங்காடு பாசுபதேசுவரர் ஆலயத்தை மையமாக கொண்டு (08) நடைபெற்ற கிழக்கு மாகாண பொங்கல் விழாவில் கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்தலால் ரெட்ணசேகர மற்றும் அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேவிக்கிரம ஆகியோர் கலந்து கொண்டனர்.
பாராம்பரிய முறையிலாக நெல் அறுவடை இடம்பெற்றதுடன் மாட்டு வண்டில்கள் மூலமாக கேணிக்கரை பிள்ளையார் ஆலயத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.
அங்கு இடம்பெற்ற பூஜையினை தொடர்ந்து கலரசார பாரம்பரிய நாட்டிய நடன நிகழ்வுகளுடன் அதிதிகள் ஊர்வலமாக பாசுபதேசுவரர் ஆலயத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இதன் பின்னராக பாரம்பரிய முறையில் நெல்லில் இருந்து அரிசி எடுக்கப்பட்டு பொங்கல் நிகழ்வுகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
பின்னராக சமய தலைவர்களின் ஆசி உரை இடம்பெற்றதனை தொடர்ந்து சிறந்த காளை மாடு தெரிவு மற்றும் சிறந்த விவசாயிகள் சிறந்த மாட்டு வண்டில்கள் சிறந்த பசு வளர்ப்பு பண்ணையாளர் தெரிவுகள் சிறந்த பொங்கல் தெரிவுகள் இடம்பெற்று அவர்களுக்கான பரிசில்களும் வழங்கப்பட்டதுடன் அலங்கரிக்கப்பட்ட மேடையில் மாணவர்களின் பல்வேறு கலாசார கலை நிகழ்வுகள் இடம்பெற்றன.
இதேநேரம் நூலகங்களுக்கு நூல்களும் வழங்கப்பட்டதுடன் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் வழங்கப்பட்டதை தொடர்ந்து அதிதிகள் பாசுபதேசுவரர் ஆலய நிருவாகத்தினரால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.
நிகழ்வில் மாகாண கால்நடை வைத்திய பணிப்பாளர் நசீர் ஆலையடிவேம்பு பிரதேச செயலக உதவி செயலாளர் ஆர்.சுபாகர் அம்பாரை மாவட்ட கலாசார உத்தியோகத்தர் ஏ.எல்.தௌபீக் இராணுவ உயர் அதிகாரிகள் திணைக்கள தலைவர்கள் உள்ளிட்ட பிரதேச செயலகங்களின் கலாசார உத்தியோகத்தர்கள் ஆலயங்கள் பொது அமைப்புக்கள் விளையாட்டு கழகங்கள் என பல்வேறு அமைப்பின் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
ஆளுநர் தமிழில் இங்கு உரையாற்றுகையில் வெறுமனே யூரிப்பில் பாரம்பரிய பொங்கல் விழாவை பார்க்கும் இளைஞர்களுக்கு இந்நிகழ்வு மிகவும் பயனுள்ளது என்றார்.
இன்றைய இளம சமூகம் இவ்வாறு பொங்கல் விழா இருந்தது எனவும் சிங்களவர் தமிழர் முஸ்லிம்கள் எல்லோரும் ஒற்றுமையாக வாழ்ந்தோம் என்பதை அறிந்திருக்கமாட்டார்கள்.
யாழ்ப்பாணத்தில் உள்ளவர்களிடம் கந்தளாயில் கல்வி கற்றநான் சிங்களவர் தமிழர் முஸ்லிம்கள் எல்லோருடனும் ஒற்றுமையாக வாழ்ந்தோம் என்று கூறினால் அப்படி இருந்தீர்களா? என ஆச்சரியமாக கேட்கின்றனர்.




