1992 இல் இவ் வைத்தியசாலையின் தாதிய சேவையில் இணைந்து மிக சாதுவாகவும், இன்முகத்துடனும் கடமையாற்றி தனது 60 வயதில் 21.01.2025 அன்று
தாதிய சகோதரியாக பதவி உயர்வுடன் ஓய்வு பெற்று சென்றார் திருமதி மல்லிகா தங்கவடிவேல்.


இவரின் சேவையை பாராட்டும் நிகழ்வு (21) அன்று கல்முனை ஆதார வைத்தியசாலையில் தாதியப் பரிபாலகர் அவர்களின் ஒழுங்கமைப்பில் இடம்பெற்றுள்ளது.


இந்நிகழ்விற்கு வைத்திய நிபுணர்கள், வைத்திய அதிகாரிகள், விடுதி, பகுதி பொறுப்பாளர்கள், உத்தியோகஸ்தர்கள், சுகாதார உதவியாளர்கள் என அனைத்து  தரப்பினரும் கலந்து சிறப்பித்துள்ளனர்.


சிறப்பு அதிதியாக கலந்து கொண்ட பணிப்பாளர் வைத்திய கலாநிதி குணசிங்கம் சுகுணன் அவர்கள், சேவை பாராட்டு உரையில்,

கல்முனை ஆதார  வைத்தியசாலையில் தனது சிறந்த சேவை மூலம் அனைவரினதும் பாராட்டை பெற்ற தாதிய சகோதரி    எண்ணம் போல் வாழ்க்கை என்ற அடிப்படையில் அவர் ஆற்றிய நற்சேவையின் பலனாக அவர்களின் குழந்தைகளும் குடும்பமும் உயர்வான நிலையில் உள்ளார்கள் என அறிகின்றேன். இறைவன் அவரின் சேவையை ஆசிர்வதித்துள்ளார். 


மேலும் மூடித் திறக்கும் அலுவலகங்கள் போல் அல்லாது சுகாதார பணியை, அரச சேவைகளின் கடமை நேரமான எட்டு மணித்தியாலத்தின் மூன்று மடங்குகளாக 24 மணித்தியாலங்கள் சேவையை புரிகின்றோம். அந்த வகையில் கூடுதலான நேரம் இங்கேயே நாம் செலவு செய்ய வேண்டி உள்ளது. இதை நாம் சுயநலம் பாராது அர்ப்பணிப்புடன் செய்யும் போது நாம் வேலை செய்யும் இடத்தில் எமது சேவையின் தடயத்தை பதிக்க முடியும் எனவும், அவ்வாறே சிறந்த சேவையின் மூலம் இன்று வைத்தியசாலையில் தனது தடயத்தை பதித்து செல்கிறார் தாதிய சகோதரி அவர்கள்.


நீங்கள் ஓய்வு பெற்றாலும் இது உங்களின் தாய் வீடு எந்த நேரமும் உங்களை நானும், எமது சேவையாளர்களும் வரவேற்க தயாராக உள்ளோம். என்ன தேவை எனினும் இங்கு வந்து பெறலாம். எமது சேவையாளர்கள் உங்களுக்கான உதவிகளை நிச்சயம் செய்வார்கள் எனவும் கூறினார்.


மேலும் அதியாக கலந்து கொண்ட பொது சுகாதார பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் சாமித்தம்பி ராஜேந்திரன் அவர்களின் சேவை பாராட்டுரையில்
எந்த இக்கட்டான வேளையிலும் வழங்கப்படும் பொறுப்புகளை பொறுப்பேற்று, திறன் படவும் ஒரு மனப்பக்குவத்துடனும், தாதிய சேவைக்கு எடுத்துக்காட்டாகவும், பல பிரிவுகளில் கடமை ஆற்றிய ஒரு சேவையாளர், இன்று ஓய்வு பெறுகிறார். இவ்வாறான மனநிலையும், மிக அமைதியான சுபாவமும் கொண்ட தாதிய சகோதரி செல்வது பாரிய இழப்பாகும் என்றார். மேலும் பல  பிரிவிலிருந்து பாராட்டு கவிதைகள் நினைவுப் பரிசுகள் கௌரவிப்புக்கள் என பாராட்டு நிகழ்வு நடைபெற்றுள்ளது.