பாடசாலைகளில் உள்ள மாணவர்களின் மலசலகூடம்  மிக அசுத்தமாகவும் மோசமாகவும் காணப்படுகின்றது : சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர்  ஜே .மதன்

நூருல் ஹுதா உமர்

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட  பாடசாலைகளில் டெங்கு களத்தடுப்பு நடவடிக்கை சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர்  ஜே .மதன் அவர்களின்  தலைமையில் இன்று (06) முன்னெடுக்கப்பட்டது.

மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் , பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் டெங்கு களத்தடுப்பு  பணியாளர்கள் அடங்கலான குழுவினர்கள் இப்பரிசீலனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

பாடசாலைகளில் டெங்கு மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான பரிசோதனைகளில் ஈடுபட்டதன்  மூலம் மூன்று  பொதுச் சுகாதார பரிசோதகர்களின் கீழ் உள்ள மூன்று பாடசாலைகளில் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அங்கு உள்ள ஆண்  மாணவர்களின் மலசலகூடம்  மிகவும் அசுத்தமானதாகவும் மோசமானதாகவும் காணப்படுகின்றது. மேலும் டெங்கு நுளம்புகள், நுளம்புக் குடம்பிகளும் அதிகமாக இனம் காணப்பட்ட இடங்களாகவும் பாடசாலைகள் காணப்படுகிறமையால் அப்பாடசாலைகளுக்கு சிவப்பு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.

மேலும் பாடசாலையின் சுகாதாரத்தை சீர் செய்வதற்கு மிகக் குறுகிய கால அவகாசம் வழங்கப்பட்டதுடன் அந்த குறுகிய காலத்திலும் டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய  இடங்கள் அழிக்கப்படுவதுடன் மலசலகூடங்களும் சீரமைக்கப்பட வேண்டும் என இதன்போது வலியுறுத்தப்பட்டது. இவற்றினை குறிப்பிட்ட காலத்தில் சிறப்பாக பேணாத பாடசாலைக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படும் என்றும் சூழலை பராமரிக்க களத்தடுப்பு நடவடிக்கைகள்  தொடர்ந்து முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் சுகாதார வைத்திய அதிகாரி இதன்போது தெரிவித்தார்