கல்முனை ஆதாரவைத்திய சாலையின் முகாமைத்துவ குழு (21) அன்று கூடி பல சிறந்த தீர்மானங்களை எடுத்துள்ளது. அதன் அடிப்படையில் 2025 ஆம் ஆண்டிற்கான வேலை திட்டத்தின் கீழ் விடுதிகள் பிரிவுகள் என்பன  நோயாளர்களின் தேவைக்கு அமைவாகவும், தற்போது உள்ளதை விட மேலான சேவையை வழங்கும் விதமாகவும் மாற்றி அமைக்கும் திட்டத்தில் வைத்தியசாலையின் பிரிவுகள், விடுதிகள் என்றவற்றின் பொறுப்பு உத்தியோகஸ்தர்களின் ஆலோசனைகள் பெறப்பட்டன. அனைத்து திருத்த வேலைகளும் மிக விரைவாகவும் நடைமுறைக்கு ஏற்ற வகையிலும் திருத்தப்படவும், ஒழுக்குகள் கசிவுகளை நிறுத்தும் நடவடிக்கைகளை துரிதப்படுத்த சகல நடவடிக்கைகளையும்  மேற்கொள்ள உள்ளதாக பணிப்பாளர் வைத்திய கலாநிதி குணசிங்கம் சுகுணன் அவர்கள் தெரிவித்துள்ளார்.


மேலும் மிக நீண்ட நேரம் சேவையாற்றும் சேவையாளர்கள், வைத்தியசாலையை நம்பி வரும் நோயாளர்கள் என இரு தரப்பினரும் திருப்தி கொள்ளும் வகையில் திருத்தங்கள் செய்யப்படும் எனவும் உறுதி அளித்தார். சேவையாளர்களின் வாகனங்கள் மழையில் நனைவதையும் அதனால் நீங்கள் அனுபவிக்கும்  மனக்கவலையையும் நான் அறிவேன். அவ்வாறான நிலையில்  நீங்கள் சேவை செய்யும் மனப்பாங்கில் இருந்து விடுபடும் வாய்ப்புள்ளது. ஆகவே முதலில் அனைவரது வாகனங்களுக்கான பாதுகாப்பகம் விரைவாக ஒழுங்கு படுத்தி தரப்படும் எனவும். மேலும் பிரதேச மக்களின் நலன் கருதி இன்னும் பல பிரிவுகள் விடுதிகள் விஸ்தரிக்கப்பட உள்ளதாகவும், தற்போதுள்ள இட வசதி, விடுதி வசதி, ஆளணி வசதிகளை கொண்டு தேவை ஏற்படின் ஒரு புதிய முறை மூலம் காது மூக்கு தொண்டை சிகிச்சைக்கான விடுதியும் விரைவாக திறக்கப்பட வேண்டி உள்ளதாகவும், அதற்காக அனைவரது ஒத்துழைப்பையும் கேட்டுக்கொண்டார்.


கடந்த மாதம் சேவையாளர்களின் முறைப்பாடுகள் ஆலோசனைகள் என்பன முறைப்பாட்டு பெட்டி மூலம் பெறப்பட்டதுடன், அவர்களின் மனக்குறைகளை நேரடியாக தெரிவிப்பதற்காக குறித்த காலப் பகுதியும் வழங்கப்பட்டதாக தெரிகிறது. இவ்வாறு பெறப்பட்ட முறைப்பாடுகள், ஆலோசனைகளுக்கு இணங்க முதலில் வைத்தியசாலையில் நோயாளர்களுக்கும் சேவையாளர்களுக்கும் வழங்கப்படும் உணவின் சுவை, தரம் என்பவற்றை உயர்த்தும் நோக்கில் பணிப்பாளர் அவர்களே சமயலறைக்கு சென்று சமையல் கலையை மேம்படுத்தியதாகவும், இதன் பயனாக உணவுகள் மிகவும் தரமான நிலையில் உள்ளதாகவும் இதனால் சேவையாளர்களும் நோயாளர்களும் பயன் பெற்றுள்ளனர் என்றும் தெரிய வருகின்றது.


அத்துடன் பாவனைக்கான நீரின்  சுத்திகரிப்பை தினசரி கருத்தில் கொள்ள வேண்டும் எனவும் விதிகளுக்கு அமைவாக பகுப்பாய்வு செய்து உரிய பெறுபேறுகள் பெற்று பாவனைக்கு உட்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.