மதுபானச் சாலைக்கான அனுமதியை இரத்துச் செய்யுமாறு கல்முனையில் ஆர்ப்பாட்டம்.

செல்லையா-பேரின்பராசா 

கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவில் உள்ள பெரியநீலாவணையில் 2024ஆம் ஆண்டு புதிதாகத் திறக்கப்பட்ட மதுபானச் சாலையை இயங்க விடாமல் இவ்வூரில் உள்ள சிவில் அமைப்புக்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து  ஆர்ப்பாட்டம் செய்தமையினால் தற்காலிகமாக மூடப்பட்ட மதுபானச் சாலையை 2025 ஆம் ஆண்டு மீளத் திறக்க கலால் திணைக்களம் அனுமதி அளித்துள்ளது இதனைக் கண்டித்து பெரியநீலாவணையில் உள்ள சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் இணைந்து இன்று 21.01.2025 செவ்வாய்க் கிழமை  முற்பகல் 09.00 மணியளவில் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு முன்பாக மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் “மதுக்கடை வாசல் மரணத்தின் வாசல்” “முதுகெலும்பற்றவரின் முயற்சியே மதுபானக்கடை” “வேண்டாம் வேண்டாம் மதுக்கடை வேண்டாம்”  போன்ற சுலோகங்களை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் கலந்து கொண்டனர்

இதேவேளை கலால் திணைக்கள உயர் அதிகாரிகள், பிரதேச செயலாளர் பெரியநீலாவணையில் உள்ள சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டனர். மக்களின் கோரிக்கை உரிய அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. மதுபானசாலை உரிய முடிவு வரும்வரை மூடியே இருக்கும் என மக்களுக்கு அறிவிக்கப்பட்டது