ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திலும் முப்பெரும் நிகழ்வுகள்- பொங்கல் விழா கோமாதா பூஜை உழவர் கௌரவிப்பு
வி.சுகிர்தகுமார்
ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திலும் இன்று (17) பொங்கல் விழா கோமாதா பூஜை உழவர் கௌரவிப்பு என முப்பெரும் நிகழ்வுகள் இடம்பெற்றன.
ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் உதவிப்பிரதேச செயலாளர் ஆர்.சுபாகர் உள்ளிட்ட அரச உயர் அதிகாரிகள் உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
முப்பெரும் விழாவை முன்னிட்டு பிரதேச செயலகம் அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டிருந்தது.
இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் பொங்கல் விழாவில் விவசாயத்திற்கு உதவி செய்யும் பசுக்களுக்கும் விசேட பூஜைகள் நடைபெற்றதுடன் விவசாயிகளும் பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
தைபிறந்தால் வழிபிறக்கும் எனும் பெரும் நம்பிக்கையோடு பிரதேச செயலக உத்தியோகத்தர்களும்; சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் வகையில் பொங்கலிட்டு பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டதை அவதானிக்க முடிந்தது.
பூஜை வழிபாடுகளை சிவஸ்ரீ ஜெகதீஸ்வர சர்மா நடாத்தி வைத்தார்.
இதேநேரம் எதிர்வரும் ஆண்டில் இருந்து தைப்பொங்கல் விழாவானது ஆலையடிவேம்பு பிரதேச பொது விழாவாக கொண்டாடப்படவுள்ளதுடன் இவ்விழாவில் பிரதேச செயலகத்திற்குட்பட்ட அனைத்து திணைக்களங்கள் மற்றும் அரச அரசசார்பற்ற நிறுவனங்கள் பொது அமைப்புக்கள் ஆலயங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் பங்குபற்றுதல் மற்றும் ஒத்துழைப்போடு இடம்பெற ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என பிரதேச செயலாளர் இங்கு தெரிவித்தார்.