தமிழினப் பற்றாளர் அமரர் மதிசூடிக்கு அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் பரவலாக ஆத்மார்த்த அஞ்சலி நிகழ்வுகள்!

நலிவுற்ற மக்களுக்கு உதவிகள் உணவுகள்!

( வி.ரி.சகாதேவராஜா)

சிறந்த சமூக செயற்பாட்டாளர் தமிழினப் பற்றாளர் அமரர் குலத்துங்கம்  மதிசூடியின் இரங்கல் மற்றும் ஆத்மார்த்த அஞ்சலி நிகழ்வுகள் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் பரவலாக இடம் பெற்றன.

அதேவேளை,அவரது 41 வது நாள் நினைவு தினத்தை முன்னிட்டு  பின்தங்கிய பிரதேச நலிவுற்ற மக்களுக்கு அரிசி,சாறி, சாறன், பெட்சீற் உள்ளிட்ட உதவிகள் மற்றும் உணவுகள் வழங்கப்பட்டன.

பொத்துவில் செல்வபுரம், தாண்டியடி, சங்குமண்கண்டி, திருக்கோவில் காயத்ரி கிராமம், சொறிக்கல்முனை, காரைதீவு, குருக்கள்மடம்,தாந்தாமலை கற்சேனை, கல்லடி ஆகிய இடங்களில் இவ் உதவிகள் வழங்கப்பட்டன.

கனடாவில் இருந்து இதற்கென வருகைதந்த அவரது மனைவி திருமதி நித்தி மதிசூடி, மருமகன் மாதவன், உற்ற உறவினர்களான மதனராஜன் ,.குணா மற்றும் யாழ்ப்பாணம் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து வந்த உறவினர்களும் இந்த நிகழ்வுகளில் கலந்து கொண்டனர்.

நிகழ்வுகள் ஓய்வு பெற்ற உதவிக் கல்விப் பணிப்பாளரும் பிரபல ஊடகவியலாளருமான வித்தகர் விபுலமாமணி  வி.ரி.சகாதேவராஜா தலைமையில் நடைபெற்றன.

பொத்துவில் பிரதேச சபையின் முன்னாள் உபதவிசாளர் பெருமாள் பார்த்தீபன் கௌரவ அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

இணைப்பாளராக காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் மற்றும் கீதா ஜெயசிறில் ஆகியோர் செயற்பட்டனர்.

கனேடிய தமிழ் வானொலி பத்திரிகை துறையின் முன்னோடிகளில் ஒருவரும் நாடறிந்த பிரபல சமூக சேவையாளருமான குலத்துங்கம்  மதிசூடியின் இழப்பு தாயகத்தில் பாரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியிருந்தது.

 பிரபல ஊடகவியலாளரும் ஓய்வு பெற்ற உதவிக் கல்விப் பணிப்பாளருமான தேசமான்ய வித்தகர் விபுலமாமணி  வி.ரி.சகாதேவராஜா அங்கு பிரதான இரங்கல் உரையாற்றுகையில்..

யாழ்ப்பாணம் அரியாலையைச் சேர்ந்த திரு. குலத்துங்கம் மதிசூடி கனடாவில் கடந்த நவம்பர் 22 ஆம் தேதி  அகால மரணமடைந்தார் .

 பிரபல சமூக சேவையாளர்  மதிசூடி கடந்த 40 வருடங்களாக கனடாவில் வாழ்ந்து வந்தவர்.

 அவ்வப்போது இலங்கைக்கு வந்து பலவிதமான சமூக சேவைகளை வடக்கு கிழக்கில் வழங்கி வந்தவர்.

தாம் பிறந்த மண்ணை வெகுவாக நேசித்த தமிழினப் பற்றாளர் திரு.மதிசூடி அவர்கள் கொரோனா காலகட்டத்திலும் வெள்ள அனர்த்த காலகட்டத்திலும் இங்கு வந்து பாரிய சேவைகளை செய்தவர்.

 அது மாத்திரமல்ல ஒவ்வொரு வருடமும் வந்து நலிவுற்ற மக்களுக்கு நேரடியாகச் சென்று உதவி செய்து வந்தவர். அவரோடு நெருங்கிப் பழகிய ஒருவர் என்ற வகையில் அவரை நல்ல குணங்கள் நிறைந்த குணக்குன்று.

 ஆன்மீகத்திலும் அதிக ஈடுபாடு கொண்டவர். மடத்தடி மீனாட்சி அம்மன் ஆலயத்திற்கு வரும் போதெல்லாம் விஜயம் செய்வார். அமைதியான முறையில் அடக்கமாக சில ஆலோசனைகளை வழங்கி சிறப்பித்து பல ஆக்கபூர்வமான பல திட்டங்களிலும் ஒத்துழைத்தவர். பங்கெடுத்தவர் .

அவர் தமிழினத்தின் மிகுந்த பற்றாளராக விளங்கியவர். கனடாவில் கடந்த 40 வருடங்களாக தாயக மக்களின் உணர்வுகளை விளங்கிடச் செய்தவர்.

  இறுதியாக காரைதீவு பாலையடி வாலவிக்னேஸ்வரர் ஆலய கன்னி தேரோட்டத்தில் கலந்து கொண்டதையும் அக்கால கட்டத்தில் மட்டக்களப்பு புதுக்குடியிருப்பில் திறந்து வைத்த சுவாமி விவேகானந்தர் நினைவு பூங்காவை பார்வையிட்டமையும்  குறிப்பிடத்தக்கது.

அந்த விவேகானந்தர் சிலையை பார்த்த அவர் தாம் பிறந்த அரியாலையில் இந்த உயரத்தில் பிள்ளையார் சிலையை நிறுவ ஆசைப்பட்டு அங்கு அதற்கான இடத்தையும் சகபாடிகளுடன் இணைந்து பெற்றார்.

கூடவே பிள்ளையார் சிலை நிறுவும் கைங்கர்யத்தில் ஈடுபட என்னை அணுகி விவேகானந்தர் சிலையை நிறுவிய திரு.சற்குணேஸ்வரன் அவர்களோடு கலந்துரையாடினார்.

தாயகஅரசியல் செயற்பாடுகளை உன்னிப்பாக அவதானித்து வந்தவர் . நல்ல விடயங்களை 

 பாராட்டுவார். மிகவும் கண்ணியமாக கவனமாக அமைதியாக பேசுவார்.

அன்னார் விட்டபணிகளை தொட்டு செல்வதே எம்மவர் அவருக்கு செய்யும் நன்றிக்கடன் ஆகும் என்றார்.

You missed