கேரளா கஞ்சா மற்றும் போதை மாத்திரை விநியோகம் செய்த சந்தேகத்தில் பாண்டிருப்பில் ஒருவர் கைது
பாறுக் ஷிஹான்
கேரளா கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை இளைஞர்களுக்கு விநியோகம் செய்த சந்தேகத்தின் அடிப்படையில் 29 வயது சந்தேக நபரை பெரியநீலாவணை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது நேற்று மதியம் அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவில் உள்ள பாண்டிருப்பு திருவள்ளுவர் வீதியில் இயங்கும் சிகை அலங்காரம் செய்யும் கடையில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதன் போது குறித்த கடையில் 220 மிலிலி கிராம் கேரளா கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் உள்ளடங்கலாக தன்வசம் வைத்திருந்த சிகை அலங்காரம் செய்யும் 29 வயது சந்தேக நபர் கைதானார்.
மேலும் சந்தேக நபர் உள்ளிட்ட சான்றுப் பொருட்கள் என்பன சட்ட நடவடிக்கைக்காக கல்முனை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பெரியநீலாவணை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஜே.எஸ்.கே.வீரசிங்க வழிநடத்தலில் பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.