ஐஸ் போதைப்பொருளுடன் கைதான இருவரிடம் விசாரணை -கல்முனையில் சம்பவம்

பாறுக் ஷிஹான்


நீண்டகாலமாக பாடசாலை மாணவர்களிற்கு போதைப்பொருள்களை விநியோகித்து வந்த இரு சந்தேக நபர்களிடம் இருந்து ஐஸ் போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக  பொலிஸ்  பிரிவிற்குட்பட்ட  பகுதியில் வெள்ளிக்கிழமை (03) இரவு  கல்முனை விசேட அதிரடிப் படையினர்  ஐஸ் போதைப்பொருளுடன்   இருவரை கைது செய்துள்ளனர்.

கல்முனை விசேட அதிரடிப்படை அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை   நடவடிக்கைகளின் போது  20 வயது   19 வயது  மருதமுனை பகுதியை சேர்ந்த சந்தேக நபர்கள்  கைது செய்யப்பட்டுள்ளதுடன்  சந்தேக நபர்கள் வசமிருந்து மொத்தமாக  2460  மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருட்கள் மீட்கப்பட்டிருந்தன.

மேலும்  இந்த கைது நடவடிக்கையானது கல்முனை விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஆர்.ஏ.டி.சி.எஸ்.ரத்நாயக்கவின் வழிகாட்டலில்   முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன்  கைதான  சந்தேக நபர்கள் உள்ளிட்ட  சான்றுப்பொருட்கள் என்பன சட்டநடவடிக்கைக்காக கல்முனை தலைமையக  பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன்  மேலதிக விசாரணைகளை கல்முனை விசேட அதிரடிப்ப்டையினர்  மேற்கொண்டு வருகின்றனர்.