சஞ்சீவி சிவகுமார் எழுதிய வரலாற்று முக்கியத்துவமிக்க ”நற்பிட்டிமுனைத் தமிழர் வரலாற்றுச் சால்புகள்” நூல் வெளியீட்டு நிகழ்வு சிறப்பாக இடம் பெற்றது!

(செல்லையா பேரின்பராசா , சௌவியதாசன்)

பல்கலைக் கழக பதிவாளரும், இலக்கியவியலாளருமான நற்பிட்டிமுனையைச் சேர்ந்த சஞ்சீவி சிவகுமார் எழுதிய நற்பிட்டிமுனைத் தமிழர் வரலாற்றுச் சால்புகள் எனும் வரலாற்று நூலின் வெளியீட்டு நிகழ்வு இன்று 28.12.2024 சனிக்கிழமை கல்முனை வடக்குப் பிரதேச செயலகத்தின் கேட்போர் கூடத்தில் சிறப்பாக இடம் பெற்றது.

நற்பிட்டிமுனை கல்வி அபிவிருத்தி அமைப்பின் வெளியீடாக இடம் பெற்ற இந்த நூல் வெளியீட்டு விழாவுக்கு அதன் தலைவர் க. ருத்திரமூர்த்தி ஆசிரியர் தலைமை தாங்கினார்.  இவ் விழாவின் முதன்மை அதிதியாக கிழக்கு மாகாணப்  பண்பாட்டு அலுவல்கள் திணைக்கள மாகாணப் பணிப்பாளர்  சரவணமுத்து நவநீதன் ,    சிறப்பு அதிதிகளாக கல்முனை வடக்கு பிரதேச செயலாளர்  ரி.ஜே அதிசயராஜ், பிரபல எழுத்தாளர்  தமிழ்மணி உமா வரதராஜன் மற்றும் வரலாற்று ஆய்வாளர் கலாநிதி கவிக்கோ வெல்லவூர்க் கோபால் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

கல்முனை மாநகரில் உள்ள நற்பிட்டிமுனை ஒரு பழம் பெரும் கிராமம். மன்னராட்சிக் காலத்தில் திக்கதிபர் தலமாகவும் இராசாக்கள் கூடுமிடமாகவும் விளங்கிய இடம். ஒல்லாந்தர் போர்த்துக்கீசர் காலத்தைத் தவிர்த்து துல்லியமான ஆதாரங்கள் கொண்ட ஆங்கிலேயர்களின் ஆட்சிக் காலத்தினை மட்டும் நோக்கினாலேயே நற்பிட்டிமுனை வன்னிமை கோத்திரத்தைச் சேர்ந்தவர்களே கரவாகுப்பற்றின் வன்னிமைகளாக பதவி வகித்துள்ளனர் என்பதுடன் இவர்களின் காலப்பகுதி நூற்றிப் பன்னிரண்டு ஆண்டு களுக்கும் மேலாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சுற்றயல் கிராமங்கள் பலவற்றிலும் உள்ள தேசத்துக் கோயில்களில் தலைமைப் பொறுப்பினை வன்னிமை வம்சத்தினரே வகித்து வருகின்றனர். நற்பிட்டிமுனை வன்னிமைகள் நற்பிட்டிமுனையில் மட்டுமன்றி மாற்றைய பற்றுகளுக்கும் தலைமைத்துவம் வழங்கி பெருமை சேர்த்தனர். இத்தகைய பெருமை கொண்ட கிராமத்தின் வரலாற்றுச் சிறப்புகளை இந்நூல் விபரிக்கின்றது.

நற்பிட்டிமுனைக் கிராமத்தின் சால்புகளை விவரிக்கும் இந்த நூல் பதினொரு அத்தியாயங்களைக் கொண்டுள்ளது. முதல் மூன்று அத்தியாயங்களில் பூர்வீக இலங்கையில் திராவிட கலாசாரத்தின் வியாபகத்தையும் திராவிடக் குடியேற்றங்களையும் மட்டக்களப்பின் பண்டைய ஆட்சி பீடங்களையும் ஆராய்கிறது.

தொடர்ந்து வரும் அத்தியாயங்களில் நற்பிட்டிமுனையின் நிர்வாக ஒழுங்கமைப்பு வளர்ச்சி, நற்பிட்டிமுனையின் ஆட்சித் தள வரலாறு. கல்வி வரலாறு. ஆன்மீக வரலாறு, கலை இலக்கிய வரலாறு,நற்பிட்டிமுனையின் சமூக நிறுவனங்கள், நற்பிட்டிமுனையின் வழக்கிலிருந்த கதையாடல்களும் கதை கூறும் கிராமிய விளையாட்டுகளும் முதலான விடயங்களை இந் நூல் பதிவு செய்கின்றது.