இந்தியாவுக்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை வரவேற்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு இன்று (16) காலை இந்திய ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லமான ராஷ்டிரபதி பவனில் நடைபெற்றது.
குதிரைப்படை அணிவகுப்புடன் ராஷ்டிரபதி பவனுக்கு அழைத்து வரப்பட்ட ஜனாதிபதி அநுர குமார திசானாயக்கவுக்கு இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரினால் மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதன்போது பூரண அரச மரியாதையுடன் 21 மரியாதை வேட்டுக்கள் தீர்க்கப்பட்டு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வரவேற்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து இந்திய இராணுவத்தின் அணிவகுப்பு மரியாதை வழங்கி அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதன்பின், இருதரப்பு பிரதிநிதிகளும் இரு நாட்டு தலைவர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டனர். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் உத்தியோகபூர்வ வரவேற்பு நிகழ்வில் இராஜதந்திரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
உத்தியோகபூர்வ வரவேற்பு நிகழ்வைத் தொடர்ந்து, ராஜ்கொட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவுச்சின்னத்திற்கு ஜனாதிபதி அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் தனது முதலாவது உத்தியோகபூர்வ வெளிநாட்டு விஜயத்தை நினைவுகூரும் வகையில் ராஜ்கொட்டில் உள்ள காந்தி தர்ஷன் வளாகத்தில் அசோக மரக்கன்று ஒன்றை நாட்டிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, விருந்தினர் புத்தகத்திலும் கையொப்பமிட்டார்.
பிரதமர் நரேந்திர மோடிக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு இன்றைய தினம் (16) நடைபெற்றது.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க டில்லியில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் பேச்சுவார்த்தை சற்றுமுன் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார்.
இந்தியாவுக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருக்கும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு, டில்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று (16) காலை அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் இந்தியாவின் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்.
இதையடுத்து, இந்தியா – இலங்கை உறவுகளை வலுப்படுத்துவது குறித்து பிரதமர் மோடியும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவும் பேச்சுவார்த்தை நிகழ்த்தினர்.
மேலும், மீனவர்கள் பிரச்சினை, இலங்கை தமிழர் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
. இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவிற்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று இரவு நடைபெறவுள்ளது.
அதே வேளை, இந்திய உப ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் மற்றும் நிதி மற்றும் நிறுவன விவகார அமைச்சர் நிர்மலா சீதாராமன், சுகாதார அமைச்சர் ஜே. பி. நட்டா ஆகியோரையும் ஜனாதிபதி இன்று சந்தித்து கலந்துரையாடல் நடத்த உள்ளார். மேலும் எமது நாட்டில் முதலீடுகளை மேற்கொள்வது குறித்து இந்தியாவிலுள்ள பாரிய அளவிலான வர்த்தகப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல்களை நடத்தவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கையில் பொருளாதார மறுமலர்ச்சியை ஏற்படுத்த இந்தியாவின் மிகப்பெரிய சந்தையை பயன்படுத்திக்கொள்வது குறித்து கவனம்
இந்தியாவுக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருக்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தங்கியிருக்கும் புதுடில்லி ITC MAURYA ஹோட்டலுக்கு வருகைத் தந்த இந்திய நிதி மற்றும் நிறுவன அலுவல்கள் அமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர், (Dr.S.jayashankar) மற்றும் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் ஸ்ரீ அஜித் தோவால் ஆகியோர் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடினர்.
இந்தியா – இலங்கை பொருளாதார ஒத்துழைப்புக்களை பலப்படுத்திக்கொள்ளல் மற்றும் இருநாடுகளுக்கும் இடையிலான முதலீட்டு வாய்ப்புக்களை விரிவுபடுத்திக்கொள்வது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் இந்திய நிதி, நிறுவன அலுவல்கள் அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
அதேநேரம் இந்திய சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு அதிகளவில் அழைத்து வருவது மற்றும் இலங்கையின் விவசாய நவீனமயமாக்கல், டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
ஜனாதிபதி மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு சிநேகபூர்வமாக இடம்பெற்றதோடு, இலங்கையின் பொருளாதார மறுமலர்ச்சிக்கு இந்தியாவின் மிகப்பெரிய சந்தையை பயன்படுத்திக்கொள்வது குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
மேலும், இந்நாட்டின் சுற்றுலா, முதலீடு மற்றும் வலுசக்தி துறைகளில் ஒத்துழைப்பு வழங்குவற்கும் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் இதன்போது இணக்கம் தெரிவித்தார்.
மீன்பிடித்துறை மற்றும் தேசிய ஒற்றுமை மேம்பாடு உள்ளிட்ட இருநாடுகளுக்கும் அன்னியோன்யமான விடயங்கள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
அதனையடுத்து இந்திய பாதுகாப்பு ஆலோசகர் ஸ்ரீ அஜித் தோவால் (Shri Ajith Doval) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்து வலயத்தின் பாதுகாப்பு குறித்து கலந்துரையாடினார்.
வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், தொழில் அமைச்சர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ உள்ளிட்டோரும் இதன்போது கலந்துகொண்டனர்.