ஒரு நாள் காய்ச்சலாயினும் வைத்தியசாலையை நாடவும் என்று பொதுமக்களுக்கு விசேட அறிவிப்பு
வடக்கை அச்சுறுத்தும் மர்மக் காய்ச்சல் யாழ். வடமராட்சி பிரதேசத்தில் தீவிரமடைந்து
வரும் நிலையில் பருத்தித்துறை – மந்திகை ஆதார வைத்தியசாலையில் நேற்று அவசர
கலந்துரையாடல் நடைபெற்றது. வைத்திய நிபுணர்கள் உள்ளிட்ட சுகாதாரத் தரப்பினர் இதில் பங்கேற்று தற்போதைய நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்தனர்.
இதன்போது இதுவரை உயிரிழந்த அனைவரும் எலிக்காய்ச்சல் பரவும் அடிப்படைச் சூழல்களில் இருந்து மாறுபட்டு இயல்பான சூழலில் வாழ்ந்து வந்துள்ளார்கள் எனத் தெரியவந்துள்ள நிலையில், மர்மக் காய்ச்சலுக்கான அடிப்படை தொடர்பில் உடனடியாக ஒரு முடிவுக்கு வரமுடியாதவாறு குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது எனவும், வழமைக்கு மாறான குண இயல்புகளைக் கொண்ட வைரஸ் அல்லது பக்டீரியா பரவல்
காரணமாக இந்தக் காய்ச்சல் ஏற்படலாம் என்று வைத்திய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தக் கலந்துரையாடலின் நிறைவில் மர்மக் காய்ச்சல் பாதிப்பு அடையாளம் காணப்பட்ட பகுதிகளுக்குச் சென்று விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்வது எனவும், பாதிப்புகள் அடையாளம் காணப்படும் இடத்தில் தடுப்பு மருந்துகளை நேரடியாக வழங்குவது எனவும், ஒரு நாள் காய்ச்சலாக இருப்பினும் அருகில் உள்ள அரச வைத்தியசாலைக்குச் செல்லுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்துவது எனவும்
தீர்மானிக்கப்பட்டுள்ளது