ஊடகவியலாளர் பைஷலுக்கு சமூக விஞ்ஞான “சாஹித்ய மாகாண விருது!

சீலாமுனை நிருபர்

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் நாடாத்தப்பட்ட 2024 ஆம் ஆண்டு மாகாண இலக்கிய விழாவில் சிரேஷ்ட ஊடகவியலாளர் பைஷல் இஸ்மாயில் சமூக விஞ்ஞானம் (ஆயுள்வேதம்) “சாஹித்ய மாகாண விருது” வழங்கி கெளரவிக்கப்பட்டார்.

கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எச்.ஈ.எம்.டபிள்யூ.ஜி. திசாநாயக்க தலைமையில் நேற்று (11) திருகோணமலை இந்து கலாசார மண்டபத்தில் இடம்பெற்ற இவ்விழாவின்போது கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்கள மாகாண ஆணையாளர் வைத்தியர் எம்.ஏ.நபீலினால் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம், சான்றிதழ் மற்றும் காசோலை போன்றன வழங்கி கெளரவிக்கப்பட்டார்.

பொதுமக்களுக்கு நோய் பற்றிய தெளிவையும், அதிலிருந்து எவ்வாறு பாதுகாப்பு பெற்றுக்கொள்ளலாம் என்ற விழிப்புணர்வுகளை வழங்கும் நோக்கில், துறைசார் வைத்திய நிபுணர்கள் ஊடாக பெற்றுக்கொண்ட மருத்துவ ஆக்கங்களை “நலன் தரும் மருத்துவம்” என்ற பெயரில்,
சிரேஷ்ட ஊடகவியலாளர் பைஷல் இஸ்மாயில்
தொகுத்து வெளியீடு செய்திருந்தார்.

அந்நூல் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் நடுவர் குழுவினால் தெரிவு செய்யப்பட்டு “சமூக விஞ்ஞானம்” (ஆயுள்வேதம்) “சாஹித்ய மாகாண விருதை வழங்கி கெளரவித்தனர்.

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள மாகாணப் பணிப்பாளர் சரவணமுத்து நவநீதனின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இவ்விழாவுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர பிரதம அதிதியாகவும், சிறப்பு அதிதியாக கிழக்கு மாகாண பிரதம செயலாளர் ஆர்.எம்.பி.எஸ்.ரத்நாயக்க ஆகியோருடன் கெளரவ அதிதிகளாக அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்கள், பிரதிப் பிரதம செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

இவ்விழாவில், கடந்த மூன்று வருடங்களுக்குள் தெரிவு செய்யப்பட்ட கலைஞர்களுக்கான விருதுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.