பெரு வெள்ளத்தில் உயிர் நீத்த உறவுகளுக்கான சர்வமத ஆத்ம சாந்தி பிரார்த்தனை கிழக்கிலங்கை சொற்பொழிவாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் காரைதீவில் இடம் பெற்றது!

( வி.ரி.சகாதேவராஜா)

காரைதீவில் அண்மையில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் உயிர் நீத்த உறவுகளுக்கான சர்வமத ஆத்ம சாந்தி பிரார்த்தனை நேற்று (8) ஞாயிற்றுக்கிழமை மாலை காரைதீவு கண்ணகி அம்மன் ஆலய முச்சந்தியில் தலைவர் சிவ ஸ்ரீ க.வி.பிரமீன் ஐயா தலைமையில் நடைபெற்றது.

கிழக்கிலங்கை சொற்பொழிவாளர் ஒன்றியம் இதற்கான ஏற்பாடுகளைச் செய்தது.

இந்நிகழ்வில் சர்வ மத மதகுருமார்கள், அம்பாறை மாவட்ட  தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா, அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேவர்த்தன, மேலதிக அரசாங்க அதிபர் சிவ ஜெகராஜன், கல்முனை ஆதார வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் ஜீ. சுகுணன் மற்றும் பல சர்வமத பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

 காரைதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உபுல் சாணக, ஆலய பரிபாலன சபையினர், இந்துமா மன்ற உறுப்பினர்கள், உலமா சபைகளின் நிர்வாகிகள், ராவணா அமைப்பினர், உயிர் நீத்த உறவுகளின் பெற்றோர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

சர்வமத தலைவர்களின் பிரார்த்தனையோடு ஆரம்பமான நிகழ்வில் அதிதிகள் உரையை தொடர்ந்து அனைவரும் இணைந்து அகல் விளக்குகளில் தீபச்சுடரேந்தி அனர்த்தத்தின் போது உயிர் நீத்த உறவுகளின் ஆத்மா சாந்தி அடையவும் எதிர்காலத்தில் இவ்வாறான அனர்த்தங்கள் இடம்பெறாமல் பாதுகாக்கவும் பிரார்த்தனைகள் இடம்பெற்றதோடு, உயிர்களை காக்க களப்பணி செய்த வீரர்களும் நினைவுகூரப்பட்டனர். 

இனம் மதம் மொழிகளுக்கு அப்பால் மனிதநேயமும் அன்பும் உடையவர்களாக நல்லிணக்கத்தோடு எதிர்கால சந்ததியை கட்டியெழுப்புவதற்காகவே இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.