கல்முனை ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளராக வைத்தியர் கு.சுகுணன் இன்று கடமையை பொறுப்பேற்றார்.

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் புதிய பணிப்பாளராக வைத்தியகலாநிதி குணசிங்கம் சுகுணன் இன்று 04.12.2024 கடமையை பொறுப்பேற்றார்.

இவர் கல்முனை மற்றும் மட்டக்களப்பு பிராந்தியங்களின் சுகாதார சேவைகள் பணிப்பாளராகவும் வவுனியா வைத்தியசாலையின் பணிப்பாளராகவும் காத்திரமான சேவைகளை செய்திருந்தார். தற்போது நாடளாவிய ரீதியில் இடம் பெறும் வைத்திய உயரதிகாரிகளின் இடமாற்ற முறையின் அடிப்படையில் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு வைத்தியர் கு.சுகுணன் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். முன்னதாக களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் அளப்பரிய சேவையாற்றிய இவர் இடமாற்றம் பெற்று கல்முனை பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளராக கொரோனா காலகட்டத்தில் சிறப்பாக சேவையாற்றினார்.

பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்தில் பதில் பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளராக கடமையாற்றிய இவர் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளராக பணியாற்றினார்.

இன்றைய பதவியேற்பு நிகழ்வில் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் இறுதியாக பணிப்பாளராக பணியபற்றி அம்பாறை வைத்தியசாலைக்கு இடமாற்றம் பெற்றுச்சென்றுள்ள வைத்தியர் ரங்க சந்ரசேன அவர்களும், கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் 10 வருடங்கள் பணிப்பாளராக வைத்தியசாலையின் வளர்ச்சியில் அளப்பெரிய சேவையாற்றி தற்போது மட்டக்களப்பு பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரியாக சேவையாற்றும் வைத்தியர் இரா.முரளீஸ்வரன் அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தார்.