செவ்வி.. தயவுசெய்து மாலை மரியாதைகளுக்கு அழைக்க வேண்டாம்! .20 வருடம் கழித்து அந்த உறவுகளுக்கு ஒரு சிறிய கைமாறு. அவ்வளவு தான். காரைதீவு சமூக செயற்பாட்டாளர் லவன் இவ்வாறு கூறுகிறார்.
அண்மையில் காரைதீவில் ஏற்பட்ட பெரும் வெள்ள அனர்த்தத்தின்போது
முழு மூச்சாக நின்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு மாயமான மதரசா மாணவர்களின் உடலங்களை கண்டுபிடித்து கரை சேர்ப்பதில் செயல்பட்ட காரைதீவைச் சேர்ந்த இந்த இளைஞன் தவராசா லவன் முதன்மையானவன்.
சமகாலத்தில் முஸ்லிம் தமிழ் மக்களின்
மத்தியிலும் பேசப்படுகின்ற ஒரு சேவையாளனாக
அவர் திகழ்கின்றார் .
அந்த மீட்புப் பணிகள் முடிவுற்றதும் அவரை வீட்டிற்கு அழைத்துப்
பெற்ற இந்த செவ்வி இவ்வாறு அமைகிறது .
ஆரம்பத்தில் அவர் இவ்வாறு கூறுகிறார்.
உயிர் பிரிந்ததும் அந்த உடல் சாதி மதங்களை கடந்து நிற்கும். அது மனித குலத்தின் உடைய பொக்கிஷமாக கருதப்படும்.
பொக்கிஷங்களைத் தேடி அலைந்தமைக்கு
சன்மானம் எதற்கு?
கௌரவம் எதற்கு?
விருந்துகள் எதற்கு?
விழாக்கள் எதற்கு?
பொன்னாடைகள் எதற்கு?
2004 ம் ஆண்டு சுனாமியிலே தாய் தந்தையரை மற்றும் உறவுகளை இழந்து நிர்க்கதியாய் நின்ற எனக்கும்
என் குல காரைதீவு மக்களுக்கும் உணவு, உடை, உறையுள் மற்றும் பாதுகாப்பு வழங்கி அடைக்கலம் தந்த ஊர்களில் சம்மாந்துறை மற்றும் மாவடிப்பள்ளி
சிறப்பானதல்லவா …
20 வருடம் கழித்து 2024 ல் அந்த உறவுகளுக்கு ஒரு சிறிய கைமாறு செய்ய காலம் கை கூடியதை மட்டுமே அந்தக் கணமும் இந்தக் கணமும்
எந்த கணமும் எங்கள் மனங்கள் உணர்ந்தது உணர்கின்றது உணரும்.
இதை மனதில் நிறுத்தி தயவுசெய்து எனக்கும் எனது சகோதரர்களுக்கும் தொலைபேசி மூலமாகவோ கடிதங்கள் மூலமாகவோ வாழ்த்துக்கள் கூறுவதை தவிர வேறு எந்த விடயங்களுக்காகவும் எங்களை அழைத்து சங்கடத்தில் ஆழ்த்த வேண்டாம் என Team ராவணா
சார்பில் என்றும் உங்கள் சகோதரனாக மனம் திறந்து கேட்டுக்கொள்கின்றேன் ..
எமது சேவைகளின் பின்னால் காரைதீவில் அமைந்துள்ள அனைத்து ஆலயங்களினதும் மற்றும் விளையாட்டு கழகங்களினதும் நிர்வாகங்களும், காரைதீவு உறவுகளும் பக்கபலமாக இருந்தார்கள் என்பதனை தெரிவித்து சிறப்படைகின்றோம்.
ஒற்றுமையே பலம்.
இவ்வாறு கூறிய அவரிடம் அவரது பிறப்பு பற்றி கேட்டேன்.
நான் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளார் பிறந்த மண்ணிலே 1990 .07. 16 ஆம் தேதி மூன்று சகோதரங்களுடன் பிறந்தேன்.
14 வயதிலேயே சுனாமியிலே தாய் தந்தையரை இழந்தேன். எனக்கு ஒரு சகோதரர் ஒரு சகோதரி மட்டும் உள்ளனர்.அதன் பின்பு எனது வாழ்க்கையில் திடீர் மாற்றம் ஏற்பட்டது .
அது என்ன மாற்றம்?
தாய் தந்தையரை இழந்தவர்களுக்கு கண்டி திருத்துவ கல்லூரியில் இலவசமாக கற்பதற்கு ஒரு வாய்ப்பு செய்யப்பட்டது .
சுனாமியின் போது கண்டி திருத்துவக் கல்லூரி அணியினர் காரைதீவு க்கு வந்து கிணறு சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்பொழுது இவ் வாய்ப்பு காரைதீவைச் சேர்ந்த பிரபல ஊடகவியலாளர் வி.டி.சகாதேவராஜா அவர்களிடம் சொல்லப் பட்டது. அவரே மணிமண்டபத்தில் அகதிகளாக இருந்த என்னிடம் கேட்டார். அவர் அவ் விடயத்தில் பிரதான பாகம் எடுத்தார் .
மற்றும் கண்டி எச்டீஓ ஸ்ரீகாந்த் அவர்களும் இணைந்து என்னை திருத்துவக் கல்லூரியில் சேர்ப்பதற்கு உதவி இருந்தார்கள் .
அந்த நேரத்தில் எனக்கு கண்டி தெரியாது.என்னை ஆனன் மற்றும் நடேசன் ஆகியோர் என்னை கண்டிக்கு கொண்டு சேர்த்தார்கள் .
கண்டி திருத்துவக் கல்லூரி வாழ்க்கை எப்படி இருந்தது ?
இது இலங்கையிலுள்ள ஒரு உயர் கலாசாலை. அங்கு ஐந்து வருட காலம் கற்கக் கிடைத்தது உண்மையிலேயே நான் செய்த பாக்கியம். ஐந்து வருடங்கள் ஏஎல் வரைக்கும் கற்றேன் பின்பு குடும்ப சுமை காரணமாக மேலும் கற்க முடியாமல் வீட்டுக்கு வந்தேன் .
பின்பு என்ன செய்தீர்கள்?
அப்பொழுது போலீஸ் போக்குவரத்து பிரிவில் எனக்கு தொழில் கிடைத்தது. பதினான்கு ஆண்டுகள் சேவையாற்றினேன். பின்பு போலீஸ் மாணவர் சிப்பாய் படையணியில் இணைந்து தற்போது மாணவர்களுக்கு அணிவகுப்பு பயிற்சிகளை வழங்கி வருகின்றேன் .
வெள்ள அனர்த்தத்தில் உங்களது சேவை பெரிதாக பேசப்பட்டது. அப்படி என்ன செய்தீர்கள் ?
நாங்கள் ராவணா படகு சேவை ஒன்றை செய்தேன் .
அதில் வெள்ளத்தில் மாயமான மாணவர்களின் உடலை பெற்றுக் கொடுத்தோம். எங்களுடன் இன்னும் பலர் இணைந்து இருந்தார்கள் .அது ஒரு பெரும் கைங்கரியமாக இருந்தது. இதற்காக நாங்கள் யாரிடமும் ஒரு ரூபாய் கூட வாங்கவில்லை .வாங்க போவதுமில்லை .
ஆக நமசிவாயம் ஜெயகாந்தன் மற்றும் கிருபைராஜா ஆகியோரின் உதவியோடு தான் இந்த படகு சேவையை செய்திருந்தேன்.
இப்பொழுது இதற்காக பலரும் உதவி செய்ய பாராட்ட முன் வருகிறார்கள்.நாங்கள் அதை ஏற்கவில்லை .
அது ஏன் ?
நாங்கள் இந்த மாதிரி மரியாதை பொன்னாடைகளை ஏற்றால் அந்த உதவியில் அர்த்தம் இல்லை. செய்த சே வைக்கும் மரியாதை இல்லை .எனவே தயவு செய்து எங்களை கூப்பிட வேண்டாம். ஒரு திருப்தி உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள முஸ்லிம் சகோதரர்களும் நம்மவர்களும் தொடர்பு கொண்டு வாழ்த்தியதோடு தேவையான உதவிகளை இயந்திரப்படகு வாங்கி தருவதாக கூட சொன்னார்கள். நாங்கள் எதனையும் ஏற்கவில்லை .அது தேவையும் இல்லை .
நீங்கள் பௌசர் மூலம் குடிநீர் வழங்கிய சேவை பற்றி கூறுங்கள்..
அம்பாறையில் இருந்து காரைதீவுக்கு வருகின்ற பிரதான தண்ணீர் குழாய் உடைந்து தண்ணீர் இன்றி காரைதீவு மக்கள் கடந்த ஒரு வாரமாக தத்தளிக்கின்றனர்.
இந்த வேளையிலே நாங்கள் ராவணா அமைப்பினர் சில உதவிகளை பெற்று தண்ணீரை இரவு பகலாக வீதி வீதியாக சென்று வழங்கி வந்தோம் . காரைதீவு இளைஞர் அணியினரும் எனக்கு ஒத்துழைப்பு தந்தார்கள். அதன் கணக்கு விபரங்கள் பின்னர் வெளியிடப்படும் .
நீங்கள் காரைதீவுக்கு கொக்கியை அறிமுகப்படுத்தியுள்ளீர்களே!
ஆம். நான் கண்டி திருத்துவக் கல்லூரியில் இருக்கின்ற பொழுது இந்த கொக்கி விளையாட்டை கற்றுக் கொண்டேன் .அதனை எமது ஊரிலும் அறிமுகப்படுத்த வேண்டும் என்பதற்காக இங்கு வந்து செய்தேன்.
அப்பொழுது எங்களுக்கு மிகவும் உற்சாகமாக ஆலோசகர்களாக செயற்பட்டவர்கள் திரு. சகாதேவராஜா மறைந்த திரு.உருத்திரன் திரு.எஸ். நந்தகுமார் திரு.சிதம்பரநாதன் திரு உமாசங்கரன் ஆகியோர் எங்களுக்கு இற்றைவரைக்கும் இந்த கொக்கி விளையாட்டுக்கு உதவி செய்கிறார்கள்.அஸ்கோ அமைப்பின் ஸ்தாபகர் கனடாவில் வசிக்கும் டாக்டர் அ.வரதராஜன் எமது ஹொக்கி லயன்ஸ் கழகத்திற்கு உந்து சக்தியாக விளங்குகிறார்.
நாங்கள் மாகாணமட்டம் தேசிய மட்டம் வரைக்கும் சென்று சாதனைகள் பல படைத்திருக்கின்றோம்.
ஆப்பொழுது ட்ரக்ஸ் அமைப்பு மற்றும் பல அமைப்புகள் உதவி செய்தன.இப்போது அஸ்கோஅமைப்பு உதவி செய்கிறது. அவர்களை மறக்க முடியாது .
கடற்கரையில் தண்ணீர் பந்தல் போட்டதாக கூறப்படுகிறதே?
ஆம். எனது மீன் வாடிக்கு முன்பாக தண்ணீர் பந்தல் ஒன்றை ஏற்படுத்தி உள்ளேன். அங்கு வருகின்றவர்கள் தாகத்தை தாராளமாக தீர்க்கலாம்.
ஆன்மீக ஈடுபாடு பற்றி..
ஆம். வருடாவருடம் முள்ளுக் காவடி எடுப்பது. பாதயாத்திரையில் ஈடுபடுவது. யாத்திரீகர்களுக்கு உதவுதல். இப் பிராந்தியத்தின் தீமிதிப்பு நிகழ்விற்கு தீக்குழி தயாரித்தல் போன்றவை.
உங்கள் எதிர்கால இலட்சியம் ?
தொடர்ச்சியாக இதே போன்ற சேவைகளை முறையாக ஆலோசகர்களோடு இணைந்து முன்னெடுப்பதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்.
விபுலமாமணி. வி.ரி.சகாதேவராஜா
காரைதீவு நிருபர்.
















