கல்முனை நகர் உட்பட பல பிரதேசங்கள் யாவும் நீரில் மூழ்கின!
பிரபா
தற்பொழுது வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்க நிலை காரணமாக நாட்டின் பல பகுதிகளிலும் அடை மழை பெய்து வருகிறது.
வட கிழக்கின் பல்வேறு மாவட்டங்களிலும் வெள்ள அபாய நிலை தோன்றியுள்ளது. அந்த வகையில் கல்முனையில் கரையோர பிரதேசங்கள், மற்றும் தாழ்நிலப் பகுதிகள் யாவும் நீரினால் நிரம்பி வருகின்றது.மக்கள் குடியிருப்புகள் நீர்நிலைகள் போன்று காட்சியளிக்கின்றது.
கல்முனை வடக்கு பிரதேச செயலக வீதி, இலங்கை போக்குவரத்து சாலை,, வீதி அபிவிருத்தி அதிகார சபை, போன்ற காரியாலயங்கள் உள்ள இடங்கள் அனைத்தும்
நீரினால் நிரம்பி வழிகின்றன.
கல்முனை நாவிதன்வெளிக்கான போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளது. கடலோரப் பிரதேசங்கள் யாவும் நீர் நிரம்பியதன் காரணமாக சில இடங்களில் முகத்துவாரங்களும் வெட்டப்பட்டுள்ளன.
கல்முனையின் கடல் பகுதி மிகவும் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. இயற்கை அனர்த்தம் ஒன்று ஏற்பட்டு விடுமோ என்ற அச்ச உணர்வுடன் மக்கள் அன்றாட தொழிலுக்கு கூட செல்ல முடியாமல் வீட்டுக்குள் முடங்கி உள்ளனர். வெள்ளப்பாதிப்புக்குள்ளான குடும்பங்கள் உறவினர் வீடுகளிலும், பொது இடங்களிலும் இடம் பெயந்துள்ளனர்.
இந்நிலை மேலும் நீடிக்கும் பட்சத்தில் பாரிய துன்ப நிலைக்கு மக்கள் தள்ளப்படுவர் .எனவே அரசும்,அதிகாரிகளும் மக்களுக்கான நிவாரண உதவிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியம்