oppo_0

அம்பாறையில் கனமழை-போக்குவரத்து மேற்கொள்வதில் பிரதேச மக்கள் சிரமம்

பாறுக் ஷிஹான்



வங்காள விரிகுடாவின் தென்கிழக்குப் பகுதியில் தாழமுக்கப் பிரதேசம்  உருவாகி  தீவிரமடைந்து தாழ் அமுக்கமாக வங்காள விரிகுடாவின் தென்மேற்குப் பகுதியில்  தாழ் அமுக்கமாகி  தீவிரமடைவதுடன் இலங்கையின் கிழக்குக் கரையை அண்மித்ததாக அடைமழை ஏற்பட்டு வெள்ள நிலைமை காணப்படுகின்றது.

மன்னார் தொடக்கம் காங்கேசன்துறைஇ திருகோணமலைஇ மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையான ஆழமான மற்றும் ஆழமற்ற கடல் பிராந்தியங்களில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 60 – 70 கிலோமீற்றரிலும் கூடிய வேகத்தில் அடிக்கடி அதிகரித்து வீசக் கூடும். ஆகையினால் குறிப்பிட்ட இக் கடல் பிராந்தியங்களுக்கு நாளை முதல் எதிர்வரும் 28 ஆம் வரையில் மீனவர்களும் கடல்சார் ஊழியர்களும் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றனர்.

மேலும் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வழங்கப்படுகின்ற வானிலை எதிர்வுகூறல்களை கவனத்திற் கொண்டு செயற்படுமாறு பொது மக்கள் வேண்டிக்கொள்ளப் படுகின்றனர்.பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 20 – 30 கிலோமீற்றர் வேகத்தில் வடகிழக்குத் திசையில் இருந்து காற்று வீசும்.எனவே 2024 நவம்பர் 23ம் திகதி தொடக்கம் நவம்பர் 28ம் திகதி வரை வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக அதிக மழைவீழ்ச்சி கிடைக்கக்கூடிய வாய்ப்பு காணப்படுவதனால் அனைவரையும் வெள்ள அனர்த்தத்துக்குரிய முன்னாயத்தங்களை மேற்க்கொள்ளுமாறு அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவி பணிப்பாளர் எம்.றியாஸ்  வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அத்துடன் கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தில் நேற்று இரவு முதல் பெய்த மழையினால்  தாழ் நிலங்களில் வெள்ள நிலை ஏற்பட்டுள்ளது.எனினும்  இதுவரையில் எப்பகுதிலும்  மக்கள் இடம் பெயர்வுகள் எதுவும் பதிவாகவில்லை.அந்தமான்  நிக்கோபார் தீவுகளுக்கு அருகாமையில் ஏற்பட்டுள்ள தாளமுக்க நிலையினால் இலங்கையின் கிழக்கு பிராந்தியத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு அதிகமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இதன் படி பொத்துவில்  பிரதேசத்தில்  இருந்து தென் கிழக்காக  சுமார் 1300 கிலோ மீற்றர்  தொலைவில் இது உருவாகியுள்ள உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.எனவே சகல மக்களும்  அவதானமாக இருக்குமாறு கேட்கப்பட்டுள்ளனர்.

மேலும் மேலதிக வெள்ள நீர் வடிந்தோட அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு சின்னமுகத்துவார கழிமுகம்  வெட்டப்பட்டுள்ளது. எனவே ஒரு பாரிய அனர்த்தத்தை எதிர் கொள்ள அம்பாறை மாவட்ட மற்றும் கிழக்கு வாழ் மக்கள் தயாராக இருக்க வேண்டும்.இன்னும் மூன்று நாட்களுக்கு அதிக மழை பெய்யும் என்பதால் முன்னாயத்த  நடவடிக்கைகளில் இளைஞர்கள் உள்ளூர் சமூக நிறுவனங்கள் அவசரமாக களத்தில் இறங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டத்தில் பெய்து வரும் அடைமழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் மாவட்டத்தின் கரையோர பிரதேசங்களான நாவிதன்வெளி, நற்பிட்டிமுனை, ஆலையடிவேம்பு, அட்டாளைச்சேனை, நிந்தவூர், காரைதீவு, பாண்டிருப்பு, மருதமுனை, பெரியநீலாவணை, துறைவந்தியமேடு போன்ற தாழ்நில பகுதிகளில் வெள்ள நீர் பெருக ஆரம்பித்துள்ளன.

தொடர்ச்சியாக கன மழை பெய்வதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதுடன் நாளாந்த கூலி வேலைகளில் ஈடுபடும் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதோடு தாழ் நிலப் பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியிருப்பதால் டெங்கு நோய் பெருகக்கூடிய அபாயமும் ஏற்பட்டுள்ளன.

அனர்த்தங்கள் நடைபெறும் இடங்களுக்கு கூட்டம் கூட்டமாக பார்வையிடச் செல்வதை தவிர்த்து பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.கடந்த சில நாட்களாக பெய்துவரும் அடைமழை காரணமாக அப்பகுதியில் வசிக்கும் மக்களின் வீடுகளுக்குள் மழை வெள்ளம் தேங்கி நிற்பதால் பல  குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.  தற்போது     வெள்ள நீர் வடிந்தோடுவதற்காக சில முகத்துவாரங்கள்  வெட்டப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ள போதிலும் வெள்ள நீர் தேங்கி காணப்படுகின்ற நிலைமையே தொடர்கதையாகவுள்ளது.

இந்த மழை வெள்ளத்தின் காரணமாக இம்மாவட்டத்தின் பெரிய நீலாவணை,  பாண்டிருப்பு , நற்பிட்டிமுனை , சேனைக்குடியிருப்பு  ,காரைதீவு , சம்மாந்துறை,  அக்கரைப்பற்று,  பகுதிகளில்  இப்பிரதேசத்தில் பல  குடும்பங்கள் வெள்ளத்தினால் நிர்க்கதிக்குள்ளாகியுள்ளதுடன் தற்போது அங்குள்ள மக்கள்  வீடுகளிற்குள் மழை வெள்ளம் உட்புகும் நிலை ஏற்பட்டுள்ளது.

அத்துடன் அரச தனியார் நிறுவனங்கள் கூட வெள்ள நீரினால் பாதிக்கப்பட்டுள்ளன.இதற்கு காரணம் மழை நீர் வழிந்தோடுவதற்குரிய முறையான வடிகால் இன்மையே முக்கிய காரணம் என்ற குற்றச்சாட்டும் மக்களினால் முன்வைக்கப்பட்டுள்ளது.